நெடுந்தீவில் தொடரும் பதற்றம் - உடனடியாகக் கைது செய்; வீதியில் இறங்கி மக்கள் கோஷம்!
22 Apr,2023
இரண்டாம் இணைப்பு
நெடுந்தீவில் படுகொலை இடம்பெற்ற இடத்துக்கு விஜயம் மேற்கொண்டு சடலங்களை பார்வையிட்டு நீதவான் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிய வேளை, நெடுந்தீவு மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் போது, குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோஷம் எழுப்பியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சட்ட வைத்திய அதிகாரி, நீதிபதி மற்றும் காவல்துறை உயர் அதிகாரி ஆகியோர் நெடுந்தீவிற்கு சென்றுள்ளனர்.
படுகொலை தொடர்பான மேலதிக விபரங்கள் விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த ஆறு பேர் மீது இனம் தெரியாத நபர்கள் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் குறித்த வீட்டின் உரிமையாளர் எனவும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறுபேர் தங்கியிருந்த போதே இந்த கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது தாக்குதலுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள வயோதிபப் பெண், கனகர் பூரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை கொலை இடம்பெற்றமைக்கான காரணம் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையிலேயே யாழிலிருந்து மரண விசாரணை அதிகாரி மற்றும் நீதிபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.