திருகோணமலையில் தமிழரை துரத்த சூட்சுமம்
08 Apr,2023
திருகோணமலையில் கடந்த வியாழனன்று தமிழ் - சிங்கள கடற்றொழிலாளர்களுக்கு இடையில் எழுந்த முறுகல் நிலை வெறும் கடற்றொழில் சார்ந்த முறுகல் நிலையாகத் தெரியவில்லை.
அதற்கும் அப்பால், இவை திட்டமிட்ட சம்பவங்களின் போர்வைக்குரிய நிகழ்ச்சி நிரல்களோ என எண்ணக்கூடிய எச்சரிக்கைகளும் வந்திருக்கின்றன.
பொதுவாக கிட்டிய செய்திகளின்படி, கடந்த வியாழனன்று திருக்கடலூர் என்ற தமிழ் கடற்றொழிலாளர்கள் வாழும் திருக்கடலூர் கடற் பிரதேசத்தில் அதிகமான சூடை மீன்கள் ஒதுங்கியதால் இந்த மீனை பிடிப்பதில் ஏற்பட்ட முறுகல் பின்னர் தமிழ் - சிங்கள இனங்களுக்கு இடையேயான வன்முறைச் சம்பவமாக மாறியதாக கூறப்படுகின்றது.
இந்த வன்முறைகளில் ஏழு பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அந்தப் பகுதிகளில் சிறிலங்காவின் விசேட அதிரடி படை, இராணுவம், கடற்படை மற்றும் காவல்துறை பிரசன்னம் விரிவாக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது உண்மையில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையா, இல்லை என்றால் திருகோணமலையில் தமிழ் மக்களின் இருப்பை பிடிப்பதற்கு ஏற்படுத்தப்படுகின்ற பிரச்சினைகளா? என்பதே இங்கு முக்கிய வினாவாக உள்ளது.
இந்த திருக்கடலூர் பகுதி விஜிதபுர மற்றும் சிறிமாபுர ஆகிய இரண்டு சிங்கள குடியேற்ற கிராமங்களுக்கு இடையில் உள்ள ஒரு தமிழ் கிராமமாகும்.
இதனால் இந்த தமிழ் கிராமத்தை பலவீனப்படுத்தி விஜிதபுர மற்றும் சிறிமாபுர ஆகியவற்றை விரிவுபடுத்தும் வகையில் இவ்வாறான சம்பவங்களுக்கு பின்னணி வியூகங்களும் இருக்கக்கூடும்.
பலே திட்டங்கள்
திருகோணமலையில், ஏற்கனவே தமிழர்களின் இருப்பு குடியேற்றங்களால் ஒடுக்கப்பட்டு குறுக்கப்பட்ட நிலையில் இப்போது திருகோணமலை கரை ஓரத்தில் எஞ்சிய தமிழர்களை அங்கிருந்து அகற்றத்தான் இவ்வாறான செயற்கையான இனப் பதற்றங்கள் உருவாக்கப்படுகின்றனவா என்ற வினாக்களும் உள்ளன.
இது ஒரு அதீத கற்பனையாக சிலருக்கு இப்போதைக்கு தெரிந்தால்?
1900 ஆம் ஆண்டுகளில் திருகோணமலையில் சொற்ப எண்ணிக்கையில் இருந்த சிங்கள மக்கள் இப்போது அங்கு எவ்வாறு ஊதிப் பெருத்தார்கள் என்பதையும் விஜிதபுர உட்பட்ட பல குடியேற்றக் கிராமங்கள் எவ்வாறு உருவானவை என்ற பின்னணியையும் தெரிந்தால் இவ்வாறான கதைகள் அதீத கற்பனையாக இருக்காது என்பதும் இங்கு புரிதலுக்குரிய விடயமாகும்.