இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல நினைத்த பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்து விட்டு தமிழ்நாட்டுக்கு வந்த இலங்கையைச் சேர்ந்தவரை கண்டுபிடிப்பதற்காக, பணத்தை பறிகொடுத்த இளைஞர்களில் ஒருவர் இலங்கையில் இருந்து தமிழகம் வந்துள்ளார். தன்னை ஏமாற்றிய நபர் குறித்து அவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.
இலங்கை திருகோணமலையை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ருமேனியா, ஆஸ்திரேலியா, கனடா நாட்டில் ஏதாவது ஒரு நாட்டிற்கு கள்ளத்தோணியில் அகதியாக அனுப்பி வைப்பதாக கூறி இலங்கை திருகோணமலை வெருகல் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் உட்பட இலங்கையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 23 நபர்களிடம் பல லட்சம் இலங்கை பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பண மோசடி செய்தவர் தமிழகத்தில் தலைமுறைவு
பணத்தை பெற்றுக் கொண்ட ஜனார்த்தனன், அந்த இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்பாமல் சட்டவிரோதமாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்து தற்போது மண்டபம் ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கி இருக்கிறார்.
இந்த நிலையில், ஜனார்த்தனன் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை பெற்று தர வேண்டும் என்று கூறி பணம் கொடுத்து ஏமாந்த ஜெயக்குமார் என்பவர் மண்டபம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஜெயக்குமார் அளித்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இன்று ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
பணத்தை இழந்தவர்கள் கண்ணீர்
ஜெயக்குமார்
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஜெயக்குமார், ’’இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி புகலிடம் தேடி கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஏதாவது ஒரு நாட்டுக்கு குடும்பத்துடன் படகில் செல்லலாம் என முடிவு செய்தேன். விமானம் அல்லது கப்பல் மூலம் சென்றால் அந்த நாடுகளில் நீண்ட நாட்கள் தங்க முடியாது என்பதால் திருகோணமலையை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரிடம் நான் உட்பட திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 23 பேர் நபர்கள் அகதியாக படகில் செல்ல தலா ஒருவருக்கு 6 முதல் 10 லட்சம் ரூபாய் என ஒரு கோடிக்கு மேல் இலங்கை பணம் கொடுத்திருந்தோம். தற்போது இலங்கை உள்ள நிலையில் தொழில் இன்றி, கடும் சிரமத்திற்கு மத்தியில் வட்டிக்கு பணம் பெற்று வீடு, தோட்டம், நகை அனைத்தையும் விற்று அந்தப் பணத்தை ஜனார்த்தனனிடம் கொடுத்தோம்.
ஜனார்த்தனன் ஒரிரு நாட்களில் அனைவரையும் ஒரே படகில் கனடா, அல்லது ஆஸ்திரேலியா அனுப்பி விடுவதாக சொல்லி இருந்தார். இதனை நம்பி நாங்கள் குடும்பத்துடன் உடமைகளை தயார்படுத்திக் கொண்டு நல்ல ஒரு எதிர்காலம் அமைய போவதை நினைத்து தயாராக இருந்தோம்’’ என்றார்.
’’கடந்த அக்டோபர் மாதம் 24ஆம் தேதி ஊடகங்கள் வாயிலாக ஜனார்த்தனன் குடும்பத்துடன் கள்ள தோணியில் தமிழ்நாட்டின் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கி உள்ளார் என ஊடக செய்திகள் மூலம் தெரிய வந்தது.
நாங்கள் ஜனார்த்தனனிடம் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டோம் என அறிந்ததும் மண்டபம் முகாமில் தங்கியுள்ள எங்கள் உறவினர்கள் செல்போன் மூலம் ஜனார்த்தனனை தொடர்பு கொண்ட போது அவர் பணம் கொடுக்க முடியாது என தெரிவித்தார்.
இதனால் ஜனார்த்தனனால் ஏமாற்றப்பட்ட என்னைப் போன்ற பலர் திருகோணமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் இலங்கை அரசால் தேடப்படும் நபர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுடன் ஏமாற்றப்பட்டவர்கள் சார்பாக நான் இரண்டு நாட்களுக்கு முன் ஜனார்த்தனனை தேடி இலங்கையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து மண்டபம் முகாமிற்கு சென்று அங்கிருக்க கூடிய காவலர்களிடம் ஜனார்த்தனை சந்திக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். ஆனால் நான் முகாமுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து நான் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று எங்களை ஏமாற்றிய ஜனார்த்தனன் அகதி முகாமில் தங்கி இருக்கிறார். அவரிடம் இருந்து ஏமாந்த பணத்தை பெற்று தரும்படி கேட்டுக் கொண்டேன். அதன் அடிப்படையில் ஜனார்த்தனனை அழைத்து காவல்துறையினர் விசாரித்தனர்.
முதல் நாள் பணத்தை தான் திருப்பி அளிப்பதாக கூறிய நிலையில் மறுநாள் அழைக்கும் போது என்னை யாரென்று தெரியாது என பேசினார். காவல் நிலையத்தில் பணம் கிடைப்பதற்கான நடவடிக்கையை தொடரவில்லை. இதனால் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் ஆகியோரை சந்தித்து இலங்கையில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் ஜனார்த்தனன் ஏமாற்றிய பணத்தை திரும்ப பெற்று தருமாறு மனு அளித்துள்ளேன்.
நான் விமானம் மூலமாக இங்கு வந்தது, இங்கு தங்கியுள்ளது என இலங்கை பண மதிப்பில் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். ஜனார்த்தனன் எங்களிடம் ஏமாற்றிய பணத்தை திரும்பி வாங்கிச் சென்றால் மட்டுமே என்னை போல் பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கையில் தொடர்ந்து வாழ முடியும். இல்லையெனில் சாவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே பணத்தை உடனடியாக வாங்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனார்த்தனன் போல் பலரும் இலங்கையில் குற்ற சம்பவங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து தப்பித்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்து தங்கி உள்ளனர். எனவே இந்திய அரசு இவ்வாறான நபர்களை அடையாளம் கண்டு அவர்களை மீது உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்’’ என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
புகார் மனு பரிசீலனை
ஜெயக்குமார் அளித்த மனு குறித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் பிபிசி தமிழ் கேட்ட போது, ஜெயக்குமார் அளித்த புகார் மனு அடிப்படையில் மீண்டும் ஜனார்த்தனனிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாம் தனி ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இலங்கை போலீசார் என்ன சொல்கின்றனர்?
இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளில் சந்தேக நபர், தலைமறைவாகியுள்ள இடம் தொடர்பான தகவல்களை வழங்கும் பட்சத்தில், அவருக்கு எதிராக சர்வதேச போலீஸாரின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும் என இலங்கை போலீசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபருக்கு எதிராக இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளை நீதிமன்றத்தில் சமர்பித்து, சந்தேக நபருக்கு எதிராக பிடியாணை உத்தரவைப் பெற்று அவரைக் கைது செய்ய முடியும் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி, இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் ஊடாகவும் சந்தேக நபரை நாட்டிற்கு அழைத்து வர முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.
எனினும், சம்பவங்களுக்கு அமைய சந்தேக நபரை அழைத்து வரும் நடைமுறையில் மாற்றங்கள் காணப்படலாம் எனவும் அவர் கூறுகின்றார்.
எவ்வாறாயினும், இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு, பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இதன்படி, இந்த சந்தேக நபர் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்துள்ள பாதிக்கப்பட்ட நபர், குறித்த சந்தேக நபர் தலைமறைவாக வசித்து வரும் இடம் தொடர்பான தகவல்களைத் தமக்கு வழங்கும் பட்சத்தில், அவரை நாட்டிற்கு அழைத்து வந்து சட்ட நடவடிக்கைகளை எடுக்க தாம் தயாராக உள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறினார்.