இலங்கையில் இந்தி - இந்தியாவில் சிங்களம்: முன்னெடுக்கப்படும் பாரிய திட்டம்..!
30 Mar,2023
இந்தியப் பல்கலைக்கழகங்களில் சிங்களத்தைக் கற்பிப்பதற்கும், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இந்தியைக் கற்பிப்பதற்கும் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கு வசதியாக இரு நாடுகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் அந்தந்த துறைகளை அமைப்பதற்கும், கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்கும் இரு நாடுகளும் கொள்கையளவில் இணக்கங்கண்டுள்ளன.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய கலாசர உறவுகளுக்கான பேராயத்தின் (ஐ.சி.சி.ஆர்.) தலைவருடன் கடந்த திங்கட்கிழமை அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
முனைவர் வினய் சஹஸ்ர புத்தேக்கும், பிரதமர் தினேஸ் குணவர்த்தனவுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பின் போது, இந்தியப் பல்கலைக்கழகங்களில் சிங்களத்தைக் கற்பிப்பதற்கும், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இந்தியைக் கற்பிப்பதற்கும் வசதியாக இரு நாடுகளிலுமுள்ள பல்கலைக் கழகங்களில் அவ்வத்துறைகளை அமைப்பதற்கு ஐ.சி.சி.ஆர் தலைவர் முன் "வைத்த கோரிக்கையைப் பிரதமர் தினேஸ் குணவர்த்தன " ஏற்றுக் கொண்டார்.
இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு இந்தச் சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டது.
இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர்களான மகிந்த குணரத்ன மற்றும் தீபாலியனகே ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.