ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுக்கும் ரஷ்யாவின் சிறார் நல ஆணையாளருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமான ஐ.சி.சி நேற்று கைது ஆணையை பிறப்பித்திருக்கிறது.
இந்த நிலையில், இதன் பின்னணியில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்கனவே பல முறையீட்டு மனுக்களை தமிழினத்திற்கு இதுவரை கிட்டதாக பின்னணியையும் சற்று நோக்கிக்கொள்ளலாம்.
நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்து தமிழ் மக்களுக்கு அதிகமான புரிதல்கள் உண்டு.
தமது இனத்தின் மீது சிறிலங்கா இரசாங்கம் நடத்திய கந்தக நாசகார இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், ஆக்கிரமிப்புக் குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்காக ராஜபக்ச அதிகார மையத்தையும் குறிப்பாக மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்றிவிட வேண்டும் என எத்தனையோ மனுக்களை அனுப்பிய இனமது.
2009ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் நடாத்தப்படும் போதெல்லாம் அந்த அமர்வுகளை மையப்படுத்தி இடம்பெறும் நீதி கோரும் பயணங்கள் ஐ.சி.சியின் வாசலைத் தாண்டாமல், அங்கு ஒரு முறையீட்டு மனுவைக் கையளிக்கால் சென்றதுமில்லை. கடந்த மாதம் கூட, இவ்வாறான காட்சி தெரிந்தது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை பொறுத்தவரை, அது உலகின் இறுதி முயற்சியின் நீதிமன்றம் என்ற வர்ணிப்புக்கு உரியது.
இந்த நீதிமன்றத்தை உருவாக்கிக்கொள்வதற்காக, 123 நாடுகள் தத்தமது தரப்புக்களில் இருந்து அங்கீகார ஒப்பங்களை வழங்கியிருந்தாலும், இப்போதைய நிலையில் - அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன், சீனா, உட்பட்ட நாடுகள் அந்த அங்கீகாரத்திற்கு உடன்படவில்லை.
கடந்த வருடம் உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்த பின்னர், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வை ரஷ்யா மீதும் திரும்ப முனைந்தது.
அந்த வகையில் தற்போது, உக்ரைனில் இரு்த சிறார்களை ரஷ்யாவுக்கு சட்டவிரோதமாக நாடுகடத்திமை தொடர்பாகவே விளாடிமீர் புடினுக்கும் ரஷ்யாவின் சிறார் நல ஆணையாளர் மரியா லாவோ பெரேவாவுக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது அழைப்பாணையை விடுத்துள்ளது.
அதாவது, தொழில்நுட்ப ரீதியாக சர்வதேச ரீதியில் தேடப்படும் நபர்களாக மாறியுள்ளனர்.
இந்தக் கைது ஆணைகளை முதலில் ரகசியமாக வைத்திருக்க விரும்பிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தற்போது உக்ரைன் மீதான போர்க்களத்தில் ரஷ்யாவின் கை ஓங்கிக்கொள்வதால், மேற்குலகின் வழிநடத்தலில் தனது எண்ணத்தை மாற்றி தனது துரிய நகர்வுகளை செய்திருப்பதால், இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் ரோஹிங்கிய இன மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றங்களை விசாரிக்க வங்களாதேஷிற்கு பயணித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதம வழக்கு தொடுநர், கடந்த மாதம் 28ஆம் திகதி அன்று மீண்டும் ஹேக்கிற்கு திரும்ப வைக்கப்பட்டார்.
அவ்வாறாக திரும்பிய அவர், ரஷ்யா தொடர்பான கோப்புக்களைத் திறந்து துரிதமாக பணியாற்றியதால், இரு வாரங்களில் இந்த அறிவிப்பு(கைது ஆணை) பகிரங்கப்படுத்தப்பட்டள்ளது.
ஆனால், ரஷ்யாவை மையப்படுத்தி இவ்வளவு துரிதமாக நடந்து கொள்ளும் இதே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இற்றைக்கு சில வருடங்களுக்கு முன் ஐக்கிய நாடுகள் சபையே ஒத்துக்கொண்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் படுகொலையில் இதுவரை எந்தவொரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை என்பதையும் நினைவூட்டிக்கொள்ளலாம்.
அதாவது, உக்ரைனில் ரஷ்யாவிக் நகர்வுகளில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் வேகத்திற்கும் சிறிலங்கா போன்ற நாடுகளில் தமிழினம் மீது நடத்தப்படும் குற்றங்களுக்கான நகர்வுகளின் வேகத்திற்கும் பெரும் வித்தியாசம் இருப்பது பகிரங்கமாகவே தெரிகிறது.