2009 இறுதி யுத்தம் என்பது பல நாடுகளின் இரகசிய உதவிகளோடு பாரிய யுத்த விதி மீறல்களோடு இடம்பெற்றதொன்றாகும்.
விடுதலை புலிகளுடனான யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டோம் என சிங்கள ராணுவம் கொக்கரித்தாலும், போர் வெற்றி நாயகனாக கோட்டாபயவை தூக்கி கொண்டாடினாலும் இந்த வெற்றியானது சிங்கள இராணுவத்திற்கு உலகநாடுகள் போட்ட பிச்சை வெற்றி என்பதில் மாற்று கருத்தில்லையென்பது 2009 முதல் வெளிவரும் அனைத்து ஆதாரங்களும் ஒன்றன் பின் ஒன்றாய் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன..
இன்று ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மிக முக்கிய காரணமாக 2009 யுத்த உதவிக்காய் மகிந்த தரப்பினர் வேற்று நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களும் பெற்று கொண்ட கடன்களுமே பிரதானமாக இருக்கின்றது.
இன்று இடம் பெறும் சீன ஊடுருவலும், இந்திய ஆதிக்கமும் கூட இவற்றின் பின்னணியில் ஏற்படுத்தப்பட்ட விளைவே என்றே கூற வேண்டும்.
அந்த வகையில் இறுதி யுத்தத்தில் பிரித்தானியா எப்படி உதவியது என்பது பற்றிய விரிவான பார்வையே இப்பதிவு....
பிரித்தானியா
2009 இறுதி யுத்தத்தின் கூட்டு கொலையாளி - மறைக்கப்பட்ட பக்கம் 4 | Sri Lanka War Crimes 2009 British Help
1980 களில் இருந்தே இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானிய அரசு இராணுவ பயிற்சிகளை அளித்து வந்துள்ளது. அத்தோடு மிக முக்கியமாக இலங்கை இராணுவத்தின் சிறப்பு படைப் பிரிவுகளான STF மற்றும் LRRP ஆகியவை பிரித்தானிய சிறப்பு விமானப் படை அதிகாரிகளே தொடங்கியுள்ளனர்.
மேலும் இலங்கை இராணுவத்திற்கு வலு சேர்க்கும் முகமாக அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட இராணுவ தளவாடங்களை 2009 வரை இலங்கைக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது.
2001 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளை தீவிரவாத இயக்கமாக அறிவித்த பிரித்தானிய அரசு, அதற்கான எந்த நியாயமான காரணங்களையும் கூறவில்லை. இதன் விளைவாக பிரித்தானியாவில் வாழும் 3,00,000 ஈழத்தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு நிதிப் பங்களிப்பு செய்வது தடைப்பட்டது.
நான்காம் ஈழப் போரில் விடுதலைப் புலிகளுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதிற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கமாக இலங்கை அரசாங்கமே கூட அறிவிக்காத காலகட்டத்தில், இலங்கை அரசை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்த நிலையில், 11/9 தாக்குதல் அமெரிக்காவில் நடைபெறுவதற்கு முன்பே இப்படி ஒரு தடையை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கள காடையர்களால் அரங்கேறிய கொடூர யூலை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக, பண்டாரநாயகே சர்வதேச விமான தளத்தின் மீது விடுதலைப் புலிகள் அமைப்பு தாக்குதல் நடத்தியதால் இலங்கை அரசு 358 மில்லியன் டொலர்களை இழந்தது.
ஆனால் குறித்த தாக்குதலின் போது எந்தவொரு சர்வதேச விமானமோ அல்லது பயணிக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இதனால் தான் சர்வதேச அளவில் விடுதலைபுலிகள் கூர்ந்து கவனிக்கப்பட தொடங்கினர்.
இந்த தாக்குதலுக்கு பிறகு, இலங்கை அரசாங்கத்திற்கு நிதி உதவி செய்ததில் முக்கிய பங்காற்றியது பிரித்தானிய அரசு.
ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்தமைக்கு பிரித்தானிய, அமெரிக்கா மற்றும் இந்திய அரசுகளின் அழுத்தங்களே பிரதான காரணங்களாக இருந்தது.
அமைதி காலத்தில் அமைக்கப்பட்ட ”Sri Lanka Monitoring Mission” அமைப்பின் தலைவராக இருந்த ஸ்வீடனின் இராணுவ தளபதி மேஜர். உல்ஃப் ஹென்ரிக்சன், பிரித்தானிய மற்றும் அமெரிக்க அரசுகள் அமைதிப் பேச்சுவார்த்தையை குலைப்பதாகவும், பிற நாடுகளை விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்ய வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டியிருந்தமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
2008ல் மட்டும், இலங்கைக்கு 4 மில்லியன் யூரோ பெருமானமுள்ள இராணுவ தளவாடங்களையும் 3 மில்லியன் யூரோ அளவிலான ஆயுதங்களையும் பிரித்தானிய அரசு விற்றது.
பல ரகத் துப்பாக்கிகள் உட்பட, இராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்கள் 3,30,000 யூரோக்களுக்கும், பாதுகாப்பு கவசங்கள் 6,55,000 யூரோக்களுக்கும் இலங்கைக்கு விற்கப்பட்டது.
2006 - 2009 கால கட்டத்தில் மட்டும் 12 மில்லியன் யூரோக்கள் பெருமானமுள்ள ஆயுதங்களை பிரித்தானிய அரசு இலங்கைக்கு ஏற்றுமதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல நாடுகளின் கூட்டு சதி மூலமே சிங்கள இராணுவத்தால் 2009ல் விடுதலை புலிகளை வெற்றிகொள்ள முடிந்தது. அன்று வாங்கிய கடன்களும், அள்ளி அள்ளி கொடுத்த வாக்குறுதிகளுமே இன்று இலங்கையின் குரல்வளையை நசித்துக்கொண்டு இருக்கிறது.
போர் வெற்றி நாயகனாக கொண்டாடிய கோட்டாபயவை சிங்கள மக்களே ஓட ஓட விரட்டி அடிக்கும் அளவுக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதர நெருக்கடிக்கு பின்னால் 2009ல் அரங்கேறிய யுத்த விதி மீறல்களும் அப்பாவிதனமாக கொல்லப்பட்ட தமிழர்களும் அவற்றை மறைக்க முக்கிய நாடுகளுடன் போடப்பட்ட ஒப்பந்தங்களுமே காரணமாக இருக்கின்றன.