தமிழீழம் என்ற ஈழத்தமிழர்களின் மரபுவழித் தாயகத்தின் ஓர் பகுதியாக இந்தியஆட்புலத்தில் உள்ள தமிழ்நாடு இல்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கான சட்டப் போராட்டத்தின் ஓர்படியாக புதிதாக இந்திய உள்துறை அமைச்சிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
“தமிழர்கள் அனைவருக்குமான ஓர் தனிநாடு(தமிழீழம்) என்ற விடுதலைப் புலிகளின் குறிக்கோள் இந்தியாவின் இறைமைக்கும், ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாகும். இது இந்திய ஆட்புலத்தில் ஒரு பகுதியை(தமிழ்நாடு) இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிப்பதாகும். ஆகவே சட்டத்தின்படி “சட்டப்புறம்பான அமைப்பு” என்ற எல்லை அல்லது வீச்சுக்கு உட்பட்டது என்பதாகும்”என தமிழீழவிடுதலைப் புலிகளை மீதான தடை தொடர்பிலான ஒவ்வோர் அறிக்கையிலும் இந்திய உள்துறை அமைச்சு சொல்லும் குற்றச்சாட்டாக அமைந்து வருகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இதற்கு மறுமொழியாக “தமிழர்கள் தனிநாடு (தமிழீழம்) கோருவது தொடர்பாக ஆதரவாளர்களும், பரிவாளர்களும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், இந்திய ஆட்புலத்தில் ஒரு பகுதியின் பிரிவினையை நிகழ்த்துவதற்கான திட்டம் அல்ல”என தனது புதிய விண்ணப்பத்தில் எடுத்துரைத்துள்ளது.
“தமிழீழ விடுதலைப் புலிகள், தீர்ப்பாயத்தின் முன்னால் வந்து, இந்திய ஆட்புலத்தின் ஒரு பகுதியைப் பிரிக்கும் குறிக்கோளை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று திட்டவட்டமாக நிலை எடுக்க விடாமல் எதுவும் அவர்களை தடுக்கவில்லை'”என்று தீர்ப்பாயம் கூறியிருப்பதற்கு, தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் செயல்படத் தகுதியுள்ள ஒருவருக்கும் முறைப்படி தடை தொடர்பான அறிவித்தல்கள் வழங்கப்படவில்லை என்று நாடுகடந்த தமிழீழஅரசாங்கம் தனது பதிலாக தற்போது சமர்ப்பித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தடைநீக்கத்துக்கான செயன்முனைப்பில் இந்தியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்ஈடுபட்டு வருகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்குப் போதிய காரணம் உள்ளதா என்பதைத் தீர்ப்புரைக்கும் நோக்கத்துக்காக, இந்திய உள்துறை அமைச்சு டெல்லியில் உள்ள தீர்ப்பாயத்தின் பார்வைக்கு அறிக்கைஅனுப்பியதன் எதிரொலியாக 2019 செப்டம்பர் 5 ம் நாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவ்விசாரணையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் தன்னையும் ஒருதரப்பாக சேர்த்துகொள்ளும்படி மனு சமர்ப்பித்திருந்தார். தீர்ப்பாயம் நாடுகடந்ததமிழீழ அரசாங்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பு இல்லை என்ற காரணத்தினாலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்ற காரணத்தினாலும் உருத்திரகுமாரனின் மனுவை நிராகரித்திருந்தது.
இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகள் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நீக்கும்படி, விண்ணப்பித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இதற்கான காரணங்களில் ஒன்றாக தமிழீழ விடுதலைக்கான செயற்பாட்டில் பேச்சுரிமை மீதும், கூட்டங்கூடும் உரிமையின் மீதும் தொடர்ந்தும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள முடக்கம் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் போராடி வருகின்றவர்களின் செயற்பாட்டுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையானது, இடையூறாக அமைகின்றது என இப்புதிய விண்ணப்பத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர்கள் சார்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் பிற அமைப்புகளின் செயற்பாடுகளுக்கு தடையானது இடையூறாக அமைந்துள்ளது.
சுதந்திரமும், இறைமையும் உள்ள தமிழீழ அரசு நிறுவுதல் என்ற இலக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் இடையில் அதன் இலட்சியத்தில் பொதுத்தன்மை காணப்படுவதால், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் இந்தியாவில் செயற்பாட்டுகளை மேற்கொள்வதற்கு பெரும்நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடுவதாக இந்திய உள்துறை அமைச்சுக்கு முன்வைக்கப்பட்டுள்ள புதிய கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஈழத்தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையானது, பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்வதற்கு அல்லது ஊக்கப்டுத்துவதற்கே ஒப்பானது என்ற தவறான புரிதலை இத் தடை ஏற்படுத்துகின்றது; எமது குறிக்கோளை ஆதரிப்பவர்கள் இந்திய அரசியல் பொதுப்பரப்பில் எடுத்துரைக்கும்உரிமையினைத்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய விண்ணப்பம் வேண்டிநிற்கிறது” என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் என்று சொல்லிக்கொள்ளும் தனிமனிதர்களின் நடவடிக்கைகளானது, விடுதலைப் புலிகளின் தலைமையால் அங்கீகரிக்கப்படாவிட்டால் அவற்றுக்கு விடுதலைப் புலிகளைக் காரணமாக்க முடியாது என்ற நிலைப்பாட்டை சட்டத் தீர்ப்புக்களை ஆதாரம் காட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளது. மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு, ஒரு அமைப்புக்குரிய கட்டுமானம் தற்போது இல்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ளது.
இதேவேளை ஈழத்தமிழர்களின் அரசியல் பெருவிருப்பினை அடைவதற்கு அரச தந்திரக்களத்தில் இந்திய அரசின் ஆதரவு இன்றியமையாதது என்பதனையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.“இந்திய மக்களுடன் தோழமை தெரிவித்து, இந்தியப் பெருங்கடல் வட்டாரத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் பேணி வளர்க்கவும், இந்தியாவுடன் தமிழீழம் ஒருசிறப்பு உறவை வார்த்தெடுக்கவும் செய்யும்” என2013ம் ஆண்டு முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திரசாசனத்தில் குறிப்பிட்டமையையும் இம் மனுவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது