“பிழையான தகவல்களைச் சொல்லி வழிநடத்தியவர்களால் உந்தப்பட்டு பிரபாகரன் குறித்து பழ.நெடுமாறன் பேட்டியளித்திருக்கலாம்” என தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தயா மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியில்,
“போராட்ட தடைக்குப் பிறகு, நாங்கள் எந்தவொரு ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபடாமல் ஜனநாயக வழியில், அங்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நலவாழ்வு பணியை மேற்கொண்டு வருகிறோம். புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் மக்கள், அரச தலைவர்கள், அதிகாரிகள் என எல்லோரிடமும் எங்கள் நியாயமான கோரிக்கைகளைத் தெரியப்படுத்தி, தற்போது அவர்களுடைய மனங்களில் ஓரளவு மாற்றம் வந்து, விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கத்திற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில், பழ.நெடுமாறனின் அறிவிப்பால், விடுதலைப்புலிகளை மீண்டும் அது தொடர்பான முயற்சிகளை எடுக்க உருவாக்கி உள்ளது. அதேநேரத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு இதன் உண்மை நிலை தெரிந்தாலும், இந்த அறிவிப்புகளைக் காரணம் காட்டி, முன்னாள் போராளிகளை மிரட்டுகின்ற செயல்பாடுகளை புலனாய்வு அதிகாரிகள் மேற்கொள்வர்.
இதை உணராதவராகத்தான் இருக்கிறார், பழ.நெடுமாறன். அவருக்கு, தலைவர் பிரபாகரன் மீது பேரன்பு உண்டு. அந்த அடிப்படையிலே அவரிடம் பிழையான தகவல்களைச் சொல்லி வழிநடத்தியவர்களால் உந்தப்பட்டு பிரபாகரன் குறித்து பேட்டியளித்திருக்கலாம்.
குறிப்பாக, வைகோ, சீமான், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த தகவல்களை ஏற்றுக்கொள்ளவில்லை. பழ.நெடுமாறன் தலைவர் மீதிருந்த அன்பின் காரணமாகவே இதை வெளிப்படுத்தியுள்ளார். பழ.நெடுமாறன் தலைவர் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகச் சொல்வது தவறு.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதமே தலைவரின் வீரச் சாவை உலக மக்களுக்கு தெரியப்படுத்தி இருந்தோம்” என தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் தொடர்பான உண்மைகள் பொதுவெளிக்கு வரும் - சிறிரங்கேஸ்வரன் தெரிவிப்பு
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனது மரணம் தொடர்பில் பொய்மையை பாதுகாப்பதற்கே சிவாஜிலிங்கம் முனைகிறார் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக அமைப்பாளரும் கட்சியின் யாழ் மாவட்ட ஊடகப் போச்சாளருமான ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் பிரபாகரனது இறப்பு தொடர்பான உண்மைகள் பொதுவெளிக்கு வரும் என்றும் அப்போது சிவாஜிலிங்கம் போன்றவர்களது பொய்மைகள் அனைத்தும் அம்பலப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் சிவாஜிலிங்கம் வெளியிட்டிருந்த கருத்தொன்று தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (25) ஊடகவியலார் சந்திப்பன்றை மேற்கொண்ட சிறிரங்கேஸ்வரன் மேலும் கூறுகையில்,
தமிழரது உரிமைப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடியும்வரை விடுதலைப் புலிகள் அமைப்பினரை அழிப்பதிலும் அழிவை ரசிப்பதிலும் அதீத அக்கறைகாட்டிவந்த தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரெலே அமைப்பினர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது இறப்பிலும் மகிழ்வடைந்தவர்கள் .
தமது அரசியல் சுயலாபங்களுக்காக பொதுவெளிகளில் உண்மையை மறைத்து பொய்மையை பாதுகாப்பதில் சிவாஜிலிங்கம் போன்றோர் ஈடுபட்டு வருகின்றனர்.
ரெலோ அமைப்பின் உறுப்பினரான சிவாஜிலிங்கம் எமது கட்சியியையும் தலைவரையும் ஊடக சந்திப்பொன்றை நடத்தி விமர்சனம் செய்திருந்தார். இது தாம் தொடர்ந்தும் கூறிவரும் பொய்மையை பாதுகாப்பதற்காகவே அவரால் கூறப்பட்டது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியையும் அதன் தலைவரையும் மக்கள் நன்கு அறிந்திருப்பதன் வெளிப்பாடாகவே 1994 ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை தொடர்ந்தும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வருகின்றார்கள்.
ஆனால் சிவாஜிலிங்கத்தையும் அவரது கட்சியின் செயற்பாடுகளையும் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருப்பதன் காரணமாகவே அவரை நிராகரித்து வருகின்றனர்.
இதனால் அவர் பல்வேறு குழுக்கள், கோஸ்டிகள் , அணிகள் என்று ஒரு நிலையான இடமின்றி தாவித்தாவி திரிவதை கண்ணுடாக கண்டுகொண்டிருக்கின்றோம்.
சிவாஜிலிங்கம் தரப்பினர் குடாநாட்டில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் சக போராளிகளையும் பொதுமக்களையும் நோயாளர்களையும் சுட்டு கொன்று குவித்து கொடூரம் புரிந்ததுடன் வவுனியாவிலும் கிழக்கு மாகாணத்திலும் வரதன் குழு என்ற பெயரில் செயற்பட்டு விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களையும் அதன் ஆதரவாளர்களையும் கடத்தி கொலை, கப்பம், சித்திரவதைகள் என பல அட்டூழியங்களை செய்துவிட்டு இன்று எங்கள் கட்சி மீது சேறு பூச முனைவது விடுதலைப் புலிகளின் சொத்துக்களை புலம்பெயர் தேசங்களில் முடக்கிவைத்திருக்கும் பினாமிகளிடமிருந்து கூலி வாங்குவதற்காக மட்டும்தான்.
எனவே சிவாஜிலிங்கம் போன்றவர்கள் எமது கட்சியைப் பற்றியோ தலைமையை பற்றியோ விமர்சனம் செய்வதற்கு எவ்வித அடிப்படை தகைமையும் அற்றவர்கள் ” - என்றார்.
பிரபாகரனை உயிர்ப்பிப்பதன் பாரிய திட்டம்: தயார் நிலையில் ஒளி - ஒலி வடிவங்கள்
கடந்த வாரம் "பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்" என பழ. நெடுமாறனும் கவிஞர் காசி ஆனந்தனும் அறிவித்தது இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த அறிவிப்பிற்கான பின்னணி என்ன என்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்கிளப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறையின் முன்னாள் பொறுப்பாளரும் தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தயா மோகன் பல அதிரவைக்கும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டத்தை கொடுப்பதற்கான அழுத்தம் வருகின்றபோது, இதைக் காரணம் காட்டி இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பார்கள்.
சிங்கள கடும்போக்காளர்களிடம் கொதி நிலையை ஏற்படுத்தி, குறைந்தபட்ச அதிகாரம் கொண்ட தீர்வுத் திட்டத்தைக்கூட தமிழ் மக்களுக்குத் தர மாட்டார்கள். அங்குள்ள தமிழ் மக்களுக்கு இது ஒரு பாதிப்பான விஷயம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பல முறை நெடுமாறன் இப்படி சொல்லி இருந்தாலும் கூட முந்தைய தடவைகளுக்கும் இந்த முறைக்கும் வித்தியாசம் இருக்கிறது. பிரபாகரன் பெயரைச் சொல்லி பணம் வசூல் செய்வதைத் தடுத்த பிறகு, இதைப் பற்றியெல்லாம் வெளியில் சொல்லி மக்களைக் குழப்ப வேண்டாம் என்றுதான் இருந்தோம்.
ஆனால், அவர்கள் விடாமல் இப்படிச் செய்வது ஆபத்தானது. அந்த ஆபத்து எப்படியானது என்றால், இப்போது இவர்கள் பிரபாகரனின் மனைவி, மகள் ஆகியோரின் படங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அவற்றை உண்மை எனக் காட்டி வருகிறார்கள்.
அதே நேரம், பிரபாகரன் நோய் வாய்ப்பட்டிருப்பதாகவும் ஒரு கருத்தைப் பரப்பிவருகிறார்கள். அவருடைய சிகிச்சைக்கு நீங்கள் போதுமான பணம் தரவில்லை, ஆகவே அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைப் பரப்பப்போகிறார்கள். அந்தத் தலைவரின் பெரும் பிம்பத்தை மக்கள் வெறுக்கும் அளவுக்கான சூழலை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
எதிர்காலத்தில் அப்படியான செய்திதான் வரப்போகிறது. அதற்குத் தயார் படுத்திவிட்டார்கள். ஒளி - ஒலி வடிவங்களையெல்லாம் தயார் செய்துவைத்துவிட்டார்கள். எந்தெந்த நேரத்தில் எந்தெந்தப் படங்களை, குரல்களை வெளியிடுவது என்பதையெல்லாம் தயாரித்துவிட்டார்கள்.
அவருடைய பெருமைக்கும் கௌரவத்திற்கும் ஆபத்து வரப்போகிறது என்பதால்தான் வெளியில் வந்து பேச வேண்டியிருக்கிறது.பணம் வசூலிப்பவர்கள் பிரபாகரனை சிறுமைப்படுத்துவதற்கான முயற்சி இது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நேரத்தில் இன்னும் ஒரு விஷயத்தையும் புலம்பெயர்ந்த மக்களுக்கு சொல்ல வேண்டியிருக்கிறது. விடுதலைப் புலிகள் பெயரைச் சொல்லி பணம் கேட்பவர்கள் யாரையும் நீங்கள் ஏற்காதீர்கள். ஊக்கப்படுத்தாதீர்கள்.
விடுதலைப் புலிகள் இனிமேல் நிதி சேகரிப்பில் ஈடுபட மாட்டார்கள். போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நிதி கோரினால், அது தவிர்க்க முடியாதது.
ஆனால், அப்படி உதவிசெய்ய விரும்பினால், உங்கள் நணபர்கள் வாயிலாக பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாகப் பேசிவிட்டு அந்த உதவிகளைச் செய்யுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பிரபாகரன் மனைவி, மகள் போல வேறு சிலரை காணொளி காட்சிகள் மூலம் உருவாக்கி விடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
நேரில் நிறுத்த முடியாது என்பது உண்மைதான் என்பதால் அதற்காகத்தான் தான் முன்பே சொன்னதுபோல நோயால் இறந்தது போன்ற சூழலை உருவாக்குவார்கள். இதுதான் மிகப் பெரிய ஆபத்து எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
காசி ஆனந்தன், பழ. நெடுமாறனை பொறுத்தவரை, 90ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த போராட்ட வடிவங்கள், போராட்ட மாறுதல்கள் பெரிதாகத் தெரியாது.
சில அரசியல் நிகழ்வுகள் சார்ந்து, தகவல்களை பிரபாகரன் சில போராளிகள் மூலம் சொல்லி இருப்பார். அதற்கேற்றபடி சில விஷயங்களை அவர் செய்திருக்கலாம். அதைத் தவிர, போர்க்களம் தொடர்பாக இருவருக்குமே எதுவுமே தெரியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.