ராஜபக்சக்களின் தொழிற்சாலைகளில் முன்னாள் போராளிகள்.!
27 Feb,2023
இலங்கையில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது அந்நாட்டு இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத் தமிழர்கள் பலர் உகாண்டாவில் ராஜபக்ச சகோதரர்களுக்கு சொந்தமான 11 தொழிற்சாலைகளுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களை சர்வதேச விதிகளை மீறி ராஜபக்சக்களின் சிங்கள இராணுவம் இனப்படுகொலை செய்தது.
அதேபோல் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களையும் கைது செய்தது. விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்ட பின்னர் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை.
இப்படி இலங்கையில் திட்டமிட்டே காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்கக் கோரி அப்பாவி தாய்மார்கள் தொடர் போராட்டங்களை பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் உயிரிழந்தும் உள்ளனர்.
ஆனாலும் அப்பாவிகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. இந்நிலையில் கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி கலாரஞ்சினி கூறியதாவது:
13 ஆண்டுகளாக எமது உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்றோம். இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்ட எங்களது உறவுகளுக்கு என்னதான் ஆனது என்பது இன்று வரை தெரியவில்லை.
இலங்கையில் நிகழ்ந்திருக்கும் ஆட்சி மாற்றம் எங்களுக்கு நீதியை பெற்றுத்தராது. நாங்கள் சர்வதேச சமூகத்தின் ஊடாக நீதியை கோருகிறோம்.
ஏனெனில் இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை சர்வதேச சமூகம் உன்னிப்பாகப் பார்க்கிறது. சர்வதேசம்தான் எங்களுக்கான நீதி, அரசியல் தீர்வுகளை பெற்றுத்தர வேண்டும்.
இலங்கையில் குடும்ப ஆட்சி, இனப்படுகொலை ஆட்சி ஒழிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடுகின்றனர். ராஜபக்ச சகோதரர்களால் கைது செய்யப்பட்ட எங்களது உறவுகள் உகாண்டாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்.
அங்கு ராஜபக்சே குடும்பத்தினருக்கு சொந்தமான 11 தொழிற்சாலைகளில் ஊதியம் இல்லாத கூலிகளாக வேலைக்கு வைத்திருக்கிறார்களோ என சந்தேகிக்கிறோம்.
அந்த தொழிற்சாலைகளை வேலுப்பிள்ளை கனநாதன் என்பவர்தான் நிர்வகித்து வருகிறார். இது தொடர்பாக உலகத் தமிழர்கள் ஆராய்ந்து அறிக்கை தர வேண்டும். இவ்வாறு கலாரஞ்சினி கூறினார்.