இலங்கையைப் பொறுத்தவரை வடக்கும், கிழக்கும் முழுவதுமாக இந்தியப் பிரதமர் மோடியின் கைகளிலேயே உள்ளன. மோடியையே அந்த மாகாண மக்கள் நம்பியிருக்கிறார்கள். என தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் அபிவிருத்தித் திட்டங்களை நாங்களே செய்கின்றோம். 13ஆவது திருத்தமே தீர்வு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதற்குரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன எனவும் சுட்டிகாட்டியிருக்கிறார்.
பிரபாகரன் இருக்கிறாரா ? இல்லையா ? என்பது பற்றி பழ.நெடுமாறன் தொடர்ந்தும் பேசுகின்றார். எங்களைப் பொறுத்தவரையில் அவற்றையெல்லாம் தாண்டி இலங்கை மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்கக்கூடிய ஒரே தலைவர் மோடி மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட பின்னர் தமிழகம் சென்ற அவர் அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு 13ஆவது அரசியல் திருத்தம் நிரந்தரத் தீர்வாக அமையாது என்றும், சமஷ்டி அடிப்படையிலான தீர்வே அவசியம் என்றும் தமிழ் மக்கள் வலியுறுத்திவரும் நிலையில், அண்ணாமலை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்து 13ஆவது திருத்தத்தை உடனடியாக நடைமுறைப் படுத்தவேண்டும் என்று நாம் கோரிக்கையை முன்வைத்தோம். இலங்கை சென்றிருந்த இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும்,இலங்கையில் இப்போது இந்தியப் பிரதமர் மோடியே பேசுபொருளாக உள்ளார். அண்மையில் இந்திய மத்திய இணை அமைச்சர் முருகன் இலங்கை சென்றிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள கலாசார மண்டபத்தை இலங்கை மக்களுக்கு, அதாவது வடக்கு - கிழக்கு தமிழ் மக்களுக்கு வழங்குவதற்காகச் சென்றிருந்தார்.
அங்கு வடக்கும், கிழக்கும் முழுவதுமாக இந்தியப் பிரதமர் மோடியின் கைகளிலேயே உள்ளன. அந்த மாகாண மக்களும் அவரையே நம்பியுள்ளனர். ஏனென்றால் அபிவிருத்தித் திட்டங்களை நாங்களே செய்கின்றோம்.
பலாலியில் விமான நிலையம், காங்கேசன்துறையில் துறைமுகம், மன்னாரூடாக இந்தியாவுக்கு கப்பல் போக்குவரத்து, யாழ்ப்பாணத்தில் 11 மில்லியன் டொலர் செலவில் கலாசார மண்டபம், கொழும்பு - யாழ்ப்பாணம் தொடருந்து தண்டவாளம் என்று எங்கு பார்த்தாலும் இந்திய அபிவிருத்தித் திட்டங்களே மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தம்தான் தீர்வு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இலங்கைக்குச் சென்றிருந்த இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் இந்த விடயத்தை அந்தநாட்டு அரசாங்கத்திடம் உறுதியாகத் தெரிவித்து வந்திருக்கின்றார்.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
தற்போது தேவை மாகாணத்துக்கான அதிகாரங்கள் தான். காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் தேவை. இலங்கை சென்றிருந்த மத்திய இணை அமைச்சர் முருகனும் இது தொடர்பான பேச்சுக்களை நடத்தியிருந்தார். நிறைய விடயங்கள் அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் இருக்கிறாரா ? இல்லையா ? என்பது பற்றி பழ.நெடுமாறன் தொடர்ந்தும் பேசுகின்றார். எங்களைப் பொறுத்தவரையில் அவற்றையெல்லாம் தாண்டி இலங்கை மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்கக்கூடிய ஒரே தலைவர் மோடி மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.