பிரான்ஸ் நோக்கிய சட்டவிரோத பயணம்; 18 இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்!
07 Feb,2023
சட்டவிரோத ஆபத்தான பயணங்களை இலங்கையர்கள் நிறுத்தாமல் தொடர்கின்ற நிலையில், மூன்று குழந்தைகளுடன் 18 பேர் பயணம் செய்த இலங்கைப் படகு ஒன்று கடந்த வெள்ளியன்று மொறீஸியஸ் கடற்பரப்பினுள் பிரவேசித்து உதவி கோரியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொறீஸியஸ் தீவின் கரையோரக் காவல்படையினர் படகை வழிமறித்த போது அந்தப் படகின் கப்டன் அவசரமாக ஆயிரம் லீற்றர் எரிபொருள் உதவி கோரியதாக அந்நாட்டு செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கிறது.
ரியூனியன் தீவுக்கு செல்லலாம் என எதிர்பார்ப்பு
அந்தப்படகு இலங்கையில் இருந்து கடந்த டிசெம்பர் 4 ஆம் திகதி புறப்பட்டதாகவும், ஆபிரிக்க நாடு ஒன்றை நோக்கிச் செல்லும் வழியில் இடையில் ஜனவரி 15 இல் அது இந்து சமுத்திரத்தின் மற்றொரு தீவாகிய டியாகோ கார்சியாவில் (Diego Garcia) தரித்தது என்ற தகவலைப் படகில் இருந்தோர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் படகு மொறீஸியஸ் கடற்பரப்பினுள் அவதானிக்கப்பட்டபோது அது ரியூனியன் தீவை நோக்கியே வருகிறது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்படகில் இருப்பவர்களை மீட்பதற்கான ஏற்பாடுகளை ரியூனியன் தீவின் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும், இன்று அது ரியூனியன் கடற்பரப்பினுள் பிரவேசிக்கலாம் என்று பொலீஸ் தலைமையகம் மீட்புப் பணியாளர்களுக்குத் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் படகு தற்சமயம் மொறீஸியஸ் தீவின் துறைமுகத்தில் தரித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.