தலைவரின் மகள் துவாரகாவுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தவர் யார்? மாட்டிக்கொண்ட புலம்பெயர் கும்பல்!
03 Feb,2023
தலைவரும் அவரது துணைவியார் மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி ஒரு குழு புலம்பெயர் தேசங்களில் பெருமளவு பணப்பறிப்புக்களை மேற்கொண்டு வருவது பற்றி ‘சொன்னாலும் குற்றம்’ ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.
புலம்பெயர் நாடுகளில் தமிழ் வர்த்தகர்களைக் குறிவைத்து பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அந்தப் பணப்பறிப்பு நடவடிக்கையின் போது, முக்கியமான ஒரு காரியத்தையும் கச்சிதமாகச் செய்துவருகின்றார்கள்.
அவர்கள் கூறுவதில் சந்தேகப்பட்டு கேள்வி எழுப்புகின்றவர்கள், தலைவரின் மகள் துவாரகா என்று கூறப்படுகின்ற ஒரு இளம் பெண்ணிடம் அழைத்துச்சென்று பேசவைப்பார்களாம்.
அந்தப் பெண்ணும் முகமூடியுடன் வந்து கச்சிதமாக பல விடயங்களைப் பேசுமாம்.
இப்படி இருக்க, லண்டனில் இருந்து 'துவாரகா' என்று கூறப்படுகின்ற அந்தப் பெண்ணைச் சந்திப்பதற்கென்று அழைத்துச்செல்லப்பட்ட ஒருவர், அந்தப் பெண்ணிடம் ஒரு கேள்வியைக் கேட்டாராம்.
“ வன்னியில் உங்களுக்கு வாகனம் ஓட்டப் பழக்கியவர் யார்..?”- இதுதான் துவாரகா என்று காண்பிக்கப்பட்ட பெண்ணிடம் அவர் எழுப்பியிருந்த கேள்வி.
தடுமாறிய அந்தப் பெண் முதலில்’..மறந்துவிட்டேன்..” என்று கூறினாராம். சிறிது நேரத்தின் பின்பு அனைவரும் அறிந்த தலைவரின் மெய்ப்பாதுகாவலராக முன்னர் கடமையாற்றிய ஒரு நபரின் பெயரைக் கூறினாராம்.
அந்தப் பதிலால் தான் துவாரகா என்று கூறி பேசவந்த பெண் உண்மையிலேயே துவாரகா அல்ல என்பது உறுதியானதாம்.
உண்மையிலேயே துவாரகாவுக்கு வாகனம் ஓட்டப் பழக்கியது ஒரு சிரேஷ்ட போராளியின் மனைவிதான். அவர் தற்பொழுது பிரித்தானியாவில் வசித்து வருகின்றார்.
'துவாரகா' என்று கூறப்பட்ட பெண்ணைப் பார்ப்பதற்காகச் சென்ற வர்த்தகர், சுவிஸ் செல்வதற்கு முன்னதாக குறிப்பிட்ட அந்தப் போராளியைச் சந்தித்து துவாரகா பற்றிய விடயங்களைக் கேட்டறிந்துகொண்டதுடன், துவாரகாவுக்கு மாத்திரம் தெரிந்த உண்மைகள் பற்றியும் கேட்டறிந்துவிட்டுத் தான் புறப்பட்டிருக்கின்றார்.
புலம்பெயர் தமிழ் மக்களின் உணர்வுகளைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒரு மிகப்பெரிய சதி பல சந்தர்ப்பங்களிலும் அம்பலப்பட்டு வெளிச்சத்துக்கு வந்திருந்தாலும், அந்தச் சதியினை மேற்கொண்டுவருகின்ற குழு தொடர்ந்தும் பணவேட்டையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன