யானை, மொட்டை விரட்டியடிக்க நாட்டு மக்கள் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய பிரஜை முன்னணியின் ஏற்பாட்டாளர் சமீர பெரேரா, 13ஆவது திருத்தம் தொடர்பான அதிபர் ரணிலின் நாடகங்களைப் பார்த்து தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
ஹட்டனில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அதிபர் ரணில் விக்ரமசிங்க மக்கள் ஆணையால் அதிபராகவில்லை. 134 எம்.பிக்களே அவரை அதிபராக்கினார்கள். நான் ஒரு சிங்கள பௌத்தனாக இருந்தாலும் நாட்டைப் பிளவுபடுத்த விரும்பவில்லை.
ஆனால், 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் எனவும் ரணில் கூறியிருக்கிறார். ரணிலின் இந்த நாடகங்களுக்கு மக்கள் ஏமாறப்போவதில்லை. ரணிலின் இதுபோன்ற நாடகங்களை மொட்டும், யானையுமே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்காகவும் ரணில் இந்த நாடகத்தை ஆடுகிறார். முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை காலந்தாழ்த்த சதிகளை செய்து கொண்டு, இப்போது தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களையும் அச்சுறுத்தி வருகிறார்.
ரணிலின் இந்த நாடகங்களைப் பார்த்து, தமிழ் மக்கள் ஏமாறப்போவதில்லை. தமிழ் மக்களினது கட்சிகளில் உள்ள வயதானவர்களே, ரணிலின் இந்த நாடகங்களை நம்புவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழர்,சிங்களவர் மத்தியில் இனவாதத்தை தூண்ட முயல்கிறார் ரணில்
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாகக் கூறி, நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயல்வதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி, தமிழ், சிங்கள மக்களை மீண்டும் குழப்பப் பார்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
இப்போது நாட்டில் இருக்கும் பிரதான பிரச்சினை எது? ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடத்துவதற்குப் பதிலாக நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அரசாங்கமே கூறுகிறது. இவ்வாறான நிலையில் விரைவாக தீர்க்க முடியாதவற்றைக்கூறி, மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளை அரசாங்கம் தோற்றுவித்துள்ளது.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் 1988ஆம், 1989ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டது. இதுவரையில் 6,7 அதிபர்கள் நாட்டை ஆட்சி செய்துள்ளனர். இவர்கள்கூட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முயலவில்லை.
ஏன் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க கூட 6 தடவைகள் பிரதமாக இருந்திருக்கிறார். அப்போதுகூட ரணிலும் இதனை முயலவில்லை. ஆனால், இப்போது அதனை செய்ய முயல்கிறார்.
இதனூடாக தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டப் பார்க்கிறார். 13ஆவது திருத்த விடயத்தில் ரணிலை எதிர்ப்பது யார்? அவரின் அரசாங்கத்துக்குள் உள்ளவர்களே ரணிலை எதிர்க்கிறார்கள். இந்த விடயத்தில் சர்வகட்சி மாநாட்டை அரசாங்கம் நடத்துவதற்கு முன்னர், அரசாங்கம் அனைவருடனும் கலந்துரையாடி ஓர் இணக்கப்பாட்டுக்குவந்து அதனை அறிவித்திருக்கலாம் என்றார்.