13ஐ ஒழிக்க இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது!
30 Jan,2023
13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. அந்தச் சட்டத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும். இந்த நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
"13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனவும், அந்தச் சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் எனவும் இனவாதிகளான விமல் வீரவன்ச, சரத் வீரசேகர கூறும் கருத்துக்களைக் குப்பையில் தூக்கி வீச வேண்டும். அவர்களின் விசமத்தனமான கருத்துக்கள் இப்போது வேகாது" - என்றும் சம்பந்தன் பதிலடி கொடுத்தார்.
"13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அண்மையில் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்,ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்திவிட்டு சென்றுள்ளார்.
எம்முடன் ஜெய்சங்கர் நடத்திய பேச்சின் போதும் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தார்.
ஜெய்சங்கரின் பயணத்தின் பின்னர் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டிய ஜனாதிபதி, தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார். ஜனாதிபதி வாயால் மாத்திரம் கருத்துக்களை வெளியிடாமல் அதனைச் செயலிலும் காட்டவேண்டும்" - என்றார்.