தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோகணேசன் தமிழ்த் தேசிய சக்திகள் - இந்திய உறவு தொடர்பாக முன்வைத்த பிரதான குற்றச்சாட்டு இந்திய நாட்டு பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை படுகொலைசெய்துவிட்டு இப்போது இந்திய அரச தலைவர்களிடம், அதிகாரிகளிடம் கோரிக்கைமேல் கோரிக்கை வைப்பது யார்? என்பதாகும்.
ராஜீவ் காந்தியின் கொலையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அது விடுதலைப்புலிகள் இயக்கம் தனது இராணுவ நலனிலிருந்து எடுக்கப்பட்ட தீர்மானமாகும். இந்திய அரசின் அழிப்பு நடவடிக்கைகளில் இருந்து போராட்டத்தையும் இயக்கத்தையும் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட தீர்மானம் என்றே கூறப்படுகின்றது.
இக்கொலையின் பின்னரே இந்தியா தனது நேரடித் தலையீட்டை நிறுத்தியது என்றொரு வாதமும் முன்வைக்கப்படுகின்றது. இதன் பின்னர் தான் சர்வதேச மட்டத்திற்கு விவகாரம் சென்றது என்றும் 2009வரை போராட்டத்தை பாதுகாக்க முடிந்தது என்றும் நியாயம் முன்வைக்கப்படுகின்றது.
விவகாரம் பிராந்திய மட்டத்திற்குள் இருந்தபோது இலங்கை அரசும், பிராந்திய வல்லரசும் மட்டுமே எதிரி நாடுகளாக இருந்தன. சர்வதேச மட்டத்திற்கு சென்ற பின்னர் இலங்கை அரசு, பிராந்திய, சர்வதேச வல்லரசுகள் ஆகிய மூன்றும் எதிரிகளாக மாறின.
2009இல் இந்த மூன்று தரப்பும் இணைந்து ஆயுதப் போராட்டத்தை அழித்தன என்பது வரலாறு. இங்கு அழிக்கப்பட்டது புலிகள் இயக்கம் மட்டுமல்ல தமிழ்த்தேசிய அரசியலும் தான் என்பதுதான் முக்கியமானது.
ராஜீவ் காந்தியின் கொலை தமிழ்த் தேசிய அரசியலில் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதில் முதலாவது சர்வதேச அரசியலை வெற்றிகொள்ள முடியாத நிலைமையை உருவாக்கியமையாகும். இதுவிடயத்தில் பேராசிரியர் சிவத்தம்பி அடிக்கடி கூறும் மேற்கோள் முக்கியமானது.
அந்த மேற்கோள்,
“தேசிய அரசியலில் தான்
ஒரு தேசியப் போராட்டம் உருவாகும்
தேசிய அரசியலில் தான் தேசியப் போராட்டம்
வளர்ச்சியடையும் ஆனால்
தேசியப் போராட்டத்தின் வெற்றியை
சர்வதேச அரசியலே தீர்மானிக்கும்” என்பதாகும்.
ராஜீவ் காந்தியின் கொலை உலகம் முழுவதையும் தமிழ் மக்களின் எதிரியாக்கியது. பல நாடுகள் புலிகள் இயக்கத்தை தடைசெய்தன. இது சர்வதேச அரசியலை தமிழ் மக்கள் வெற்றிகொள்வதில் தடங்கல்களை ஏற்படுத்தின. இந்தப்பாதிப்பை இன்றுவரை தமிழ் அரசியலினால் சீராக்க முடியவில்லை.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களின் சர்வதேச அரசியல் பாதை இந்தியா - மேற்குலக அணிப்பக்கமாகத்தான் இருக்கவேண்டும். பெருந்தேசியவாதம் மேற்குலக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு என்கின்ற மூன்று தூண்களில் கட்டி எழுப்பப்பட்டு இருப்பதனாலும், தமிழர் தாயகத்தின் புவியியல் இருப்பு காரணமாகவும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தியாவிலும், புலம்பெயர் தமிழர்கள் மேற்குலக சார்பு நாடுகளில் வாழ்வதனாலும் சீனா பெருந்தேசியவாத தரப்பை ஆதரிப்பதனாலும் இந்திய - மேற்குலக அணிப்பக்கம் தமிழர்கள் சாயவேண்டிய நிலை உள்ளது.
எனவே இந்திய - மேற்குலக தரப்போடு ஒரு எதிர்ப்பு அரசியலை தமிழ் மக்களினால் பின்பற்ற முடியாது. அதற்காக எடுபிடி அரசியலை பின்பற்ற வேண்டும் என்றும் கூறவரவில்லை. மாறாக இந்திய மேற்குலக தரப்பின் நலன்களுக்கும் தமிழ் மக்களின் நலன்களுக்கும் இடையேயான நடுநிலைப் புள்ளியைக் கண்டுபிடித்து அதனைப் பலப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். இவற்றுடன் ஐக்கியமும், போராட்டமும் என்ற நிலையை கட்டியெழுப்பியிருக்க வேண்டும்.
இந்த நடுநிலைப் புள்ளியைக் கண்டுபிடித்து பலப்படுத்தியிருந்தால் இன்று தமிழ் மக்களின் நலன்கள் மட்டுமல்ல இந்தியா - மேற்குலக நலன்களும் பாதுகாக்கப்பட்டிருக்கும். இந்த உண்மையை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் அடையாளம் கண்டிருந்தது. அது புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்படுவதை விரும்பியிருக்கவில்லை ஆனால் இந்தியாவின் பலத்த பிடிவாதமே முழுமையான அழிவுநிலைக்கு கொண்டுசென்றது. புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டமையினால் தெற்காசிய அதிகாரச் சமநிலையே முழுமையாகக் குழம்பியுள்ளது.
இரண்டாவது பாதிப்பு தமிழ்நாட்டு மக்கள் பலவீனப்படுத்தப்பட்டமையாகும். தமிழ்நாட்டு மக்கள் உட்பட உலகெங்கும் வாழும் தமிழ்நாட்டு வம்சாவழித் தமிழர்கள், ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை மிகப் பெரும் சேமிப்புச் சக்திகளாவர்.
இந்திய அரசுடனான உறவில் ஈழத்தமிழர்களின் பேரம்பேசும் பலத்தை அதிகரிக்கச் செய்பவர்களும் இவர்களேயாவர். பலவீனப்படுத்தப்பட்டாலும் இன்றும்கூட தமிழ்நாட்டுத் தமிழ் மக்களே முக்கிய பாதுகாப்பு அரணாக உள்ளனர்.
ஈழத்தமிழர் விவகாரம் இந்திய தேசியவாதத்திற்கும் தமிழ்நாட்டு தமிழ்த் தேசியவாதத்திற்குமிடையே பெரும் பனிப்போரையும் தொடக்கிவிட்டிருக்கின்றது. ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகள் விடுதலையில் இந்த பனிப்போரை முழுமையாக தரிசிக்க முடிந்தது.
மூன்றாவது பாதிப்பு இந்திய அரசை இலங்கை அரசின் பக்கம் முழுமையாக தள்ளியமையாகும். அரசியலில் முக்கியமான இராஜதந்திரம் பிரதான எதிரியை தனிமைப்படுத்துவது. ஏனைய எதிரிகளை நடுநிலைவகிக்கச்செய்வது.
ராஜீவ்காந்தி கொலை இந்த இராஜதந்திர நகர்விற்கான வாய்ப்பையே இல்லாமல் செய்தது. தமிழ் அரசியலில் உள்ள மிகப்பெரிய குறைபாடு அரசியல் என்பது மூலோபாயத்தை மட்டுமல்ல தந்திரோபாயத்தையும் உள்ளடக்கியது என்பதை நிராகரித்தமைதான்.
இந்தியா - ஈழத்தமிழர் உறவு என்பது அண்ணன் - தம்பி உறவைப்போன்றது. இது பரஸ்பரம் உரிமைகளையும் கடமைகளையும் உள்ளடக்கியது. இந்த இரண்டிலும் சமநிலைகளைப் பேனாதபோது உறவுகளில் விரிசல்கள் ஏற்படுகின்றது.
இந்தியாவின் புவிசார் இருப்பும், ஈழத்தமிழர்களின் புவிசார் இருப்பும் தான் இந்த அண்ணன் - தம்பி உறவினை கட்டாயப்படுத்தியுள்ளது. தமிழர் தாயகம் இந்தியாவின் தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடையது.
எனவே இந்திய தேசியப் பாதுகாப்புக்கு எதிராக தமிழ் மக்கள் எதையும் செய்யமுடியாது. அதேவேளை தமிழ் மக்களை புறக்கணித்துக்கொண்டு அல்லது அவர்களை ஒடுக்கிக்கொண்டு இந்தியாவினால் தனது தேசியப் பாதுகாப்பினையும் ஒழுங்காகப் பேண முடியாது.
வரலாற்றில் இதுதான் நடந்தது. இந்தியா அண்ணனுக்குரிய பொறுப்போடும் கடமையோடும் செயற்படவில்லை. ஒரு வகையில் தனது நலன்களுக்கு தம்பியைப் பயன்படுத்திவிட்டு தனது நலன்களுக்காக உத்தரவாதம் கிடைத்ததும் தம்பியைக் கைவிட்டது தான் தம்பி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது தம்பியை அழித்து ஒழிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியது.
இந்தியா, தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு ஆயுத உதவிகள், பயிற்சிகள் பின்தள வசதிகள் என்பவற்றை வழங்கியதற்குக் காரணம் தமிழ் மக்கள் மீதான அக்கறையினால் அல்ல. அன்று ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா அமெரிக்காவின் ஆதிக்கம் இலங்கையில் மேலோங்குவதற்கு வழிசெய்தமை தான்.
இது இந்தியாவின் தேசியப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தமையினால் தமிழ் விடுதலை இயக்கங்களை பயன்படுத்தி இலங்கையைப் பணியவைக்க முயன்றது. இலங்கை பணிய மறுத்தபோது யாழ்ப்பாணத்தில் உணவுப்பொருட்களைப் போட்டு அபாய எச்சரிக்கையை காட்டி இலங்கையை பணியவைத்தது.
இலங்கை பணிந்தவுடன் தமிழ் மக்களை கைவிட்டதுமல்லாமல் ஒடுக்கவும் தொடங்கியது. ஒற்றையாட்சிக்குட்பட்ட மாகாணசபை முறைமைக்கு வழிவகுத்த 13ஆவது திருத்தத்தை தமிழ் மக்களின் தலைகளில் திணித்தது. இது விடயத்தில் தமிழ் மக்களின் அதிர்ப்திகளை ஒரு பொருட்டாக இந்தியா கணக்கெடுக்கவே இல்லை. புலிகள் - இந்திய அமைதிப்படை போர் இந்த ஒடுக்குமுறை காரணமாக ஏற்பட்டதொன்று தான்.
ராஜீவ் காந்தியின் கொலை இந்தியாவின் நேரடித் தலையீட்டை தடுத்து நிறுத்தினாலும் இந்தியா மறைமுகமாக தமிழ் மக்களுக்கு எதிராகவே செயற்பட்டது. இது விடயத்தில் தனித்தும், சர்வதேச சக்திகளுடன் இணைந்தும் இந்தியா செயற்பட்டது. ராஜீவ் காந்தியின் கொலை இந்தியா போரை இந்தியாவரை விஸ்தரித்ததன் விளைவுதான். புளொட் இயக்கத்தில் தளத்திற்கு பொறுப்பாக இருந்த ஜோன் மாஸ்டர் ஒரு தடவை இக்கட்டுரையாளரிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
“தேச உணர்வுகளுடன் விளையாடுபவர்கள் அதற்கான விலையை கொடுத்துத் தான் ஆகவேண்டும்”. போர் என்று வந்துவிட்டால் மக்கள்மட்டும் இறப்பார்கள் எனக் கூறமுடியாது தலைவர்களும் இறக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை தமிழர் தாயகத்தில் ஏற்படுத்திய அழிப்புக்கள் வார்த்தைகளால் வர்ணிக்கப்படக்கூடியவையல்ல. அமைதிப்படையின் டாங்கிகள் தமிழ் மக்களின் மேல் ஏற்றப்பட்டன.
இலங்கைப்படை கூட இவ்வாறான கொடூரத்தை நடத்தவில்லை. சர்வதேச போர் மரபுக்கு மாறாக யாழ் பொது வைத்தியசாலையில் மருத்துவர்கள், தாதிமார்கள், நோயாளிகள் எனப் பலர் கொல்லப்பட்டனர். சுமார் 25000 வரையான பொது மக்கள் இந்தியப்படையினால் இறந்தனர்.
“ராஜீவ்காந்தியுடன் 25 பேர் கொல்லப்பட்டது. உங்களுக்கு வலிக்குமென்றால் 25000 தமிழர்களைக் கொலை செய்தமை எங்களுக்கு வலிக்காதா”? என்ற சீமானின் கேள்வியிலும் நியாயம் இருக்கின்றது. ஒரு பெண்ணை பத்துக்கு மேற்பட்ட இந்தியப் படையினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவங்களும் நடந்திருக்கின்றன. தமிழ் மக்களின் உள்ளங்களில் இந்தியப்படை ஏற்படுத்திய வடுக்கள் இலகுவில் மறக்கக்கூடிய ஒன்றல்ல.
இறுதிப்போரின்போது இந்தியாவின் பங்கு ஒன்றும் இரகசியமானதல்ல. போரை எப்படி நடத்துவது என இலங்கை அதிகாரிகளையும், இந்திய அதிகாரிகளையும் இணைத்து குழு அமைத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. “இந்தியாவின் யுத்தத்தையே நாம் நடத்தினோம்” என மஹிந்த கூறியமையும் இங்கு கவனிக்கத்தக்கது. இறுதிப்போரின்போது மறைந்த சட்டத்தரணி பூலோகசிங்கத்திற்கு பிரபாகரன் கூறியதாக செய்தியொன்று உண்டு.
“போர் நிலைமை எங்களின் கைகளை மீறிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனாலும் நான் ஒரு கொழுக்கியைப் போட்டிருக்கிறேன். நான் இல்லாவிட்டாலும் அந்த கொழுக்கி எரிந்து கொண்டிருக்கும். தமிழ் மக்களின் இலக்கு நிறைவேறும்போது எரிதல் நின்றுவிடும்” என்பது தான் அந்தச் செய்தி.
2005ஆம் ஆண்டு மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவந்ததையும் அதன்வழி சீனாவின் ஆதிக்கம் வரக்கூடிய சூழல் ஏற்படப்போவதையும் தான் பிரபாகரன் தன்னால் போடப்பட்ட கொழுக்கி என்று கூறுகின்றார். உண்மையில் இந்தக் கொழுக்கி தான் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கும் காரணமாகியுள்ளது.
மனோகணேசன் வெறுமனே ராஜீவ்காந்தியின் கொலையைப் பற்றித்தான் கூறுகின்றார் அதற்குப் பின்னால் உள்ள அரசியலைக் கூறவில்லை.
ஆகவே அவருடைய ரஜீவ் படுகொலை பற்றிய கேள்வி, இலங்கைத் தீவின் புவிசார் அரசியலை விளங்கிக்கொள்ளாத கேள்வியாகும். இந்தியா தனது தேசிய பாதுகாப்பு காரணமாக இலங்கையில் தொடர்ச்சியாக தலையீடுகளை செய்தடியே இருக்கும்.
அதன்போது தமிழ் மக்களின் அரசியல் விவகாரத்திலும் தமிழ் மக்கள் விரும்பாவிட்டாலும் இந்தியா தலையிட்டுகொண்டேயிருக்கும். இந்த நிலையில் இந்தியாவிடம் கோரிக்கை வைக்காமல் தமிழ் மக்கள் யாரிடம் கோரிக்கை வைக்க முடியும்? என்ற பூகோள புரிதல் மனோகணேசனுக்கு அவசியம்.