இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சு.ஜெய்சங்கர், அண்மையில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மரபுரிமைகளை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அதற்கென்றே வெளிவிவகார அமைச்சில் ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் பன்னிரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த மன்னார் திருக்கேஸ்வர ஆலயத்தை இந்தியப் பிரதமர் மோடி நேரில் சென்று வழிபட்டதன் பின்னர் அவ்வாலயம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு மறுமலர்ச்சி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சரின் உரையை வரவேற்றும் அவருக்கு நன்றி தெரிவித்தும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடாபில் அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் கடந்த 13.12.2022 அன்று காசியில் நடந்த பாரதியார் பிறந்தநாள் விழாவில், மரபுரிமைகளைப் பாதுகாக்கும் கடமைகளை இந்தியாவில் மட்டுமன்றி ஏனைய நாடுகளிலும் இந்தியா செயற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் பன்னிரண்டு ஆண்டுகாலமாகப் பூட்டியிருந்த இலங்கையின் பாடல்பெற்ற தலமான திருக்கேதீஸ்வரத்தையும் தாங்கள் மீளக் கட்டியெழுப்பி புனர் நிர்மாணம் செய்திருப்பதாகவும் அதன் மூலம் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பலநூறு கோடி ரூபாய்களை செலவு செய்து ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கேதீஸ்வரம் சிவாலயத்தை மீட்டெடுத்து புனர் நிர்மாணம் செய்தமையை தமிழ் மக்கள் சார்பாக வரவேற்பதுடன் எமது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இலங்கை திருநாடு இராவணேஸ்வரன் ஆண்ட சிவபூமி என அழைக்கப்படுகிறது. இலங்கைத் தீவைச் சுற்றி ஐந்து ஈஸ்வரங்கள் (சிவஸ்தலங்கள்) இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.
அவ்வாறான ஒரு நாட்டில், சைவக் கோவில்கள் இடிக்கப்பட்டு, புதிய புதிய பௌத்த கோயில்களை உருவாக்குகிற ஒரு வேலையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து செய்து வருகின்றது.
திருக்கேதீஸ்வரத்திற்கு இணையாக பாடல் பெற்றுத் திகழும் திருக்கோணேஸ்வரத்தில்கூட இந்த அரசாங்கம் புதிய கட்டடத் தொகுதியை அமைப்பதனூடாக அதன் புனிதத்தைக் கெடுத்து, அதனை ஒரு சிங்கள பௌத்த பிரதேசமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.
இந்திய தூதுவர் நேரடியாக அங்கு சென்று, நிலைமையை நேரில் அறிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போலவே முல்லைத்தீவு, வவுனியா போன்ற பிரதேசங்களிலும் புராதன சைவக் கோயில்கள் இருந்த இடங்களில் அவை அகற்றப்பட்டு புத்த கோயில்களை உருவாக்கும் நடவடிக்கைகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆகவே, இலங்கையில் தமிழ் மக்களின் மரபுரிமைகளைக் காப்பாற்றுவதாக இருந்தால், அதனைக் காப்பாறறுவதற்கான அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கேதீஸ்வரம், கோணேஸ்வரம் ஆகியவற்றின் அடையாளங்களை எப்படி இலங்கை அரசு மாற்ற முற்படுகிறதோ அவ்வாறே ஏனைய இடங்களும் மாற்றப்படும்.
இன்று இலங்கை அரசாங்கம் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பல்வேறு வழிகளின் ஊடாக தமிழ் மக்களுக்கும் சைவ மக்களுக்கும் உரித்தான மரபுரிமைகளை மறுதலித்து, அவற்றை சிங்கள பௌத்த மயமாக்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றது.
அந்த நடவடிக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும். தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பது தொன்மைமிக்க சைவ ஆலயங்களைப் பாதுகாப்பது போன்ற அனைத்து உரிமைகளும் அதிகாரங்களும் தமிழ் மக்களுக்குக் கிடைப்பதன் ஊடாகவே நீண்ட நெடிய வரலாறுகளைக் கொண்ட அவர்களது மரபுரிமையும் பாதுகாக்கப்படும்.
ஆகவே இந்திய அரசாங்கம் இவற்றைக் கவனத்தில் எடுத்து தமிழ் மக்களின் மரபுரிமைகளை காலாதிகாலத்திற்குப் பாதுகாத்துக்கொள்ளும் அதிகாரங்களை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.