ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி நண்பகலளவில் நடைபெறவுள்ளது.
இருப்பினும், சந்திப்புக்கான இடம் மற்றும் நேரம் ஆகியன இறுதி செய்யப்பட்டிருக்கவில்லை.
அத்துடன், குறித்த பேச்சுவார்த்தையின் போது தேசியப் பேரவைக்கு அழைக்கப்பட்ட அரசியல் தலைவர்களையும் அழைப்பதற்கான அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது.
இனப் பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக பேச்சுக்களை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.
அத்துடன் வரவு - செலவு கூட்டத் தொடருக்கு அடுத்த வாரத்தில் பேச்சுக்களை நடத்த முடியும் என்றும் கோரியிருந்தார்.
இந்நிலையில், குறித்த அழைப்பு தொடர்பில் கடந்த மாதம் 25ஆம் திகதி தமிழ்க் கட்சிகள், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் கலந்துரையாடியிருந்தன.
இதன்போது நில அபகரிப்பு நிறுத்தப்பட்டு அபகரிக்கப்பட்ட நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், அதிகார பகிர்வு சம்பந்தமான அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை அமுல்படுத்தி மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும், உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த வட கிழக்கு பிரதேசத்தில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் ஆகிய மூன்று விடயங்களில் சாதகமான சமிக்ஞைகள் அரசாங்க தரப்பிலிருந்து வெளிப்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோர் நேற்று (டிச. 8) மாலை சுமார் 45 நிமிட நேரம் சந்தித்து நேரடி கலந்தாலோசனைகளை நடத்தினர்.
இதன்போது எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி அழைத்துள்ள கட்சித் தலைவர்களின் சந்திப்பின்போது தேசிய பிரச்சினைக்கான தீர்வினை முன்னெடுக்கும் வழிவகைகள் குறித்து தீவிரமாக ஆராய்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சமயத்தில் கடந்த 25ஆம் திகதி தமிழ்த் தலைவர்கள் கூடி ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடு மற்றும் முன்வைத்துள்ள மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் சுமந்திரன், ஜனாதிபதி ரணிலுக்கும் பிரதமர் தினேஷுக்கும் எடுத்துரைத்துள்ளார்.
அத்துடன் அரசியலமைப்புச் சபைக்கு கூட்டமைப்பின் சார்பில் சித்தார்த்தன் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் அவரை நியமிப்பதற்கு சபாநாயகர் தலைமையில் கூடிய கூட்டத்தின்போது வெளியிடப்பட்ட எதிர்ப்புக்கள் தொடர்பில் சுட்டிக்காட்டிய சுமந்திரன், இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளின்போது அச்சக்திகளால் விடுக்கப்படும் அழுத்தங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு குறிப்பிட்டார். அத்துடன் அரசியல் தற்றுணிவும் திடசங்கற்பமும் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் இருந்தால் மட்டுமே இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தை ஆக்கபூர்வமாக முன்னெடுக்க முடியும் என்று சுமந்திரன் கூறியுள்ளார்.
இந்நிலையில் பேச்சுக்கள் முன்னெடுக்கும் அதேவேளை அதற்கு சமாந்தரமாக மாகாண சபைத் தேர்தலை கால தாமதப்படுத்தாமல் உடனடியாக நடத்துவதோடு, அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை நடைமுறைச் சாத்தியமாக்குமாறும், அதன் ஊடாகவே ஜனாதிபதியின் தீர்வுக்கான முயற்சி தொடர்பில் தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் நம்பிக்கை பிறக்கும் எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் மற்றும் அழைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் கையாளும் பொறுப்பினை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடத்தில் ஒப்படைத்துள்ளார்.
அதன் அடிப்படையில் தினேஷ் குணவர்த்தனவினால் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய பேரவை கூட்டத்தொடருக்கு அரசியல் கட்சித்தலைவர்களும் அழைக்கப்படவுள்ளதாக பிரதமர் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.