யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று மாலையிலிருந்து நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக இன்று மதியம் வரையில் 31 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனைத்து முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ரி என் சூரியராஜ் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், 38 குடும்பங்களைச் சேர்ந்த142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 சிறுதொழில் முயற்சியாளர்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
சண்டிலிப்பாயில் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம், உடுவில் பகுதியில் உள்ள புற்றுநோய் பராமரிப்பு நிலைய பெண்கள் விடுதியில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. அத்துடன், நல்லூர் ,பருத்தித் துறை , ஊர்காவற்துறை மற்றும் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுகளில் பாதிப்புகள் கூடுதலாக உணரப்பட்டுள்ளது.
மழை வீழ்ச்சி தொடர்ச்சியாக நாளைய தினம் சனிக்கிழமை வரை எதிர்பார்க்கப்படுவதனால் பொதுமக்கள் தமக்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்தார்.
மாண்டஸ் சூறாவளியால் யாழ். மாவட்டத்தில் பல்வேறு மரங்கள் முறிந்துள்ளதுடன் விவசாய நிலங்களில் உள்ள வாழை மரங்களும் முறிந்துள்ளன.
இவ் சூறாவளி தாக்கத்தால் நேற்று இரவு யாழ். மத்திய வீதி, பலாலி வீதி மற்றும் கந்தர்மடச் சந்தியினை இணைக்கும் பிரதான வீதியில் சமண்டலை மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
இதனால் போக்குவரத்து செய்யும் பயணிகள் மிகவும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
மேலும் நீர்வேலி, கோப்பாய், புன்னலைக்கட்டுவன், புத்தூர், வசாவிளான், உரெழு உள்ளிட வாழைத்தோட்டங்களில் உள்ள வாழைமரங்களும், வாழைக்குலைகளும் பெரும் அளவு முறிந்து காணப்படுகின்றன.
இதனால் விவசாயிகள் மிக அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இன்று தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊர்காவற்றுறை மற்றும் காரைநகரில் பனை மரங்கள் வீடுகளின் மீது வீழ்ந்தமையினால் இரு வீடுகள் சேதமடைந்தன. யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப்பரப்பிற்குள் பலாலி வீதி, சுண்டுக்குழி, கயின்ரல், காலி அபூபக்கர் வீதி ஆகிய இடங்களில் பெரிய மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன.
வீசிய பலத்த காற்றினால் சேந்தாங்குளத்தில் இருந்து மாதகல் செல்லும் வீதியில் ஓரத்தில் நின்று மரம் இன்றுகாலை முறிந்து வீதிக்கு குறுக்காக விழுந்ததால் போக்குவரத்து தடைப்பட்டது.
இதனால் குறித்து வீதியூடாக பயணம் செய்த பயணிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
கடும் குளிரால் கிளிநொச்சியில் 165 மாடுகள் பலி!
தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும்குளிருடன் கூடிய மழை மற்றும் காற்று காரணமாக கிளிநொச்சியில் 165 க்கு மேற்பட்ட மாடுகள் மற்றும் 3 ஆடுகள் என்பன இறந்துள்ளன.
இந்த இறப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி கௌதாரிமுனை வெட்டுக்காடு கிராமத்தில் 60 மாடுகளும், நல்லூர் சாமிபுலத்தில் கிராமத்தில் 75 மாடுகளும், பொன்னகர் கிராமத்தில் 13 மாடுகளும், புன்னை நீராவியில் 07 மாடுகளும், நாகேந்திரபுரத்தில் 05 மாடுகளும், பூநகரியில் 05 மாடுகளுமாக 130 க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு திருவையாறு கிராமத்தில் கடும் காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்ததில் மூன்று ஆடுகள் இறந்துள்ளதோடு, மேலும் பல ஆடுகள் மற்றும் மாடுகள் என்பன காயங்களுக்குள்ளாகியுள்ளன.
கடும் குளிருடன் கூடிய மழை மற்றும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாகவும் இவ்வாறு கால்நடைகள் இறந்துள்ளதாகவும். இன்று மதியம் வரை மேற்படி எண்ணிக்கையை உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது என்றும் தெரிவிததுள்ள கால்நடை திணைக்களம் இந்த சீரற்ற காலநிலை காரணமாக இறந்த கால்நடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.