இலங்கையில் ஒரு பாரம்பரியம் மிக்க தமிழ் இனம் அழிவின் விளிம்பில் இருக்கின்றது. இது திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது, ஒரு தலைமை இல்லாமல் மக்கள் சீரழிந்து போகும் நிலையில், அதன் உச்சமாக இந்தப் போதைவஸ்தும் கூடத் தலைவிரித்து ஆடுகின்றது என யாழ்.பல்கலைக்கழக நாடகத்துறை விரிவுரையாளர் சிதம்பரநாதன் தெரிவித்தார்.
2009 இற்குப் பிறகு தமிழ் மக்களுடைய பண்பாட்டிற்கு என்ன நடந்தது என்ற ஒரு குழப்பம், கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது.
பொதுமக்கள் பாசையில் சொல்லப்போனால் 'பண்பாடு சீரழிந்து விட்டு' என்று கவலைப்படுவார்கள். இளைஞர்கள் தவறான வழியில் போகின்றார்கள் என்று பெரியவர்கள் கவலைப்படுகின்றார்கள்.
தங்கள் பிள்ளைகளை தாங்களே இழக்கும் சூழ்நிலை வந்துவிட்டது என பெற்றோர்கள் கவலைப்படுகின்றார்கள். இதற்கு அப்பால் தங்கள் பிள்ளைகளை தங்களாலேயே பராமரிக்க முடியாமல் உள்ளது என பொலிஸாரிடம் ஒப்படைக்கின்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றது.
தொன்மைமிக்க, பாரம்பரியமான தமிழ்ப் பண்பாட்டிற்கு என்ன நடந்தது?. இதனை ஒரு புத்திபூர்வமாகப் பார்க்க வேண்டும். 2009 இல் பெரிய ஒரு இனவழிப்பு நடந்தது.
தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு வேலியான அரண் உடைக்கப்பட்டது. ஆனால், தமிழ் மக்கள் தங்கள் விடுதலையை நோக்கிப் போராடியவர்கள். அதுவும் 30 வருட காலமாக தங்கள் அரண்களை அமைத்து தலை நிமிர்ந்து வாழ்ந்தவர்கள்.
கஷ்டங்கள் இருந்தாலும் தலைநிமிர்ந்து வாழ்ந்தவர்கள். இவை எல்லாம் தமிழ் மக்கள் மனதிலே ஆழப்பதிந்து இருக்கும் விடயம். அவர்கள் திரும்பத் திரும்ப தமது உரிமைக்காக எழுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். 2006க்கு முந்திய காலகட்டங்களில் பல இராஜதந்திரிகள், புத்திஜீவிகள் எங்களை வந்து சந்தித்தார்கள்.
அப்போது, உளவியல் நிபுணர் ஒருவர் எங்களை கேட்டார். என்ன உங்கள் தமிழ் மக்கள் அடிவாங்கினால் 2 நாள் குந்தி இருக்கின்றார்கள், 3வது நாள் எழுந்து கொட்டில் போடத் தொடங்குகின்றார்கள். அவர்களுடைய வாழ்க்கையை திரும்ப அமைக்கத் தொடங்குகிறார்கள்.
இந்த ஆர்வம் எங்கிருந்து வந்தது? என்று எல்லாம் கேட்டார்கள். அவர்கள் வெளியில் இருந்து வந்து எங்களுடைய சமூகத்தை ஆராய்ச்சி செய்திருந்தார்கள்.
அந்த வகையில் 2009இல் இனவழிப்பு நடந்து, அந்த அரண் உடைக்கப்படாலும், மக்கள் மீண்டெழுந்து, தமது உரிமையைக் கேட்கின்ற இனமாக இருக்கும் என்ற ஒரு அச்சம் அந்த இனப்படுகொலையை ஏற்படுத்திய ஆதிக்க சக்திகளுக்கு இருந்திருக்கும்.
அப்போது அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், இந்த இனத்தை ஒரு ஆத்ம ரீதியாக அழிக்க வேண்டும். அரணை அழித்தால் மட்டும் போதாது, இந்த இனத்தின் சுயத்தை அழிக்க வேண்டும்.
அந்த வகையிலேயே தான் வேலை செய்தார்கள். அந்த வகையில் வேலை செய்யும் போது இரண்டு விடயங்கள் இருந்தது. ஒன்று, இந்த உலகம் திறந்து விடப்பட்டிருக்கின்றது.
தாராள ஜனநாயகம், நுகர்வுப் பண்பாடு, எந்தக் குப்பையும் உள்ளே வரலாம் என்பது ஒரு பக்கம். மறுபக்கம், இந்த மக்கள் மத்தியில் ஒரு தலைமை இல்லாமல், தங்களை வழிநடத்துவதற்கு யாரும் இல்லை என்ற சூழலில், உண்மையில் போலி அரசியல்வாதிகள், நேர்மையற்ற அரசியல்வாதிகளை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு வந்ததன் மூலம், தமிழ் மக்கள் தலைமை இல்லாத இனமாக இன்று இருக்கின்றார்கள்.
இதன்காரணமாக தமிழ் மக்கள் மத்தியில் ஒரு சீரழிவை நடத்துவது இலகுவாக போயுள்ளது.
இதனால் தான் தமிழ் மக்களை வழிப்படுத்துவதற்கு சிறந்த தலைமை இல்லாமல், சமூக இயக்கம் இல்லாமல் சீரழிந்து போகும் ஒரு நிலை இன்றைக்கு உள்ளது. அதன் விழிம்பில் தான் இப்போது நின்று கொண்டிருக்கின்றார்கள்.
அதன் உச்சமாகத் தான் இந்தப் போதைவஸ்தும் கூடத் தலைவிரித்து ஆடுகின்றது. ஒரு பாரம்பரியம் மிக்க தமிழ் இனம் அழிவின் விளிம்பில் இருக்கின்றது.
ஒரு கட்டத்தில் வெற்றியின் விழிம்பில் இருந்த நாங்கள், 2005, 2006 காலப்பகுதியில் விடுதலையின் வாசலிலே வந்து விட்டோம் என்று தமிழ் மக்கள் பொங்கு தமிழர்களாகக் கூடிப் பாடினார்கள்.
ஆனால், இன்று ஒரு அழிவின் விளிம்பில் நிற்கின்ற ஒரு கட்டத்திற்கு நாங்கள் வந்துவிட்டோம். இது திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது.
ஒரு தலைமை இல்லாமல் மக்கள் சீரழிக்கப்படுகின்ற இந்த நிலையில், இந்த இனம் வந்திருக்கின்றது என்பதை நாங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு, இதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்.- என்றார்.