மாவீரர் சிந்திய குருதி வெல்வது உறுதி - சீமான் ஆதங்கத்துடன் அறிக்கை
27 Nov,2022
ஆயுதப் போராட்டத்தை கைவிட்டால் சமாதானத்தைப் பெற்றுத்தருவதாக சர்வதேச நாடுகள் உறுதியளித்த போதிலும் இதுவரை காலமும் அது நடக்கவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மாவீரர் நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், யுத்தத்திற்கு பின்னரும் தமிழர் தாயக பகுதிகளில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் இன்னல்கள் தொடர்பிலும் சீமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, போரின் போது விசாரணை என்ற பெயரில் வெள்ளை வானில் கடத்தப்பட்டோர் அனைவருக்கும் என்ன ஆனது என கண்ணீர் வடிக்கும் தாய்மார் எவரிடத்திலும் பதிலில்லை.
இயன்றளவும் தொடர்ச்சியாக தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை திணித்து தமிழர் தேசத்தை சிங்களமயமாக்கி தமிழர்களை ஈழ மண்ணில் இல்லா இனமாக ஆக்குவதற்கு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.
'மாவீரர் சிந்திய குருதி வெல்வது உறுதி'. ஒற்றுமை ஒன்றே எமது மாவீரர்கள் கனவை நிறைவேற்ற நமக்கு வைத்திருக்கும் ஒரு வழி என்பதை உணர்ந்து தாயக விடுதலை புனித இலட்சியத்திற்காக அனைவரும் கைகோர்த்து மாவீரர்கள் எமக்கு அளித்த ஆன்ம பலத்தோடு பயணிக்க வேண்டும்.
மாவீரர் தெய்வங்களுக்கு வீர வணக்கம்!
“தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளான எம் மாவீரர் தெய்வங்களுக்கு எமது வீர வணக்கம்” என தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.