சீன போர்க்கப்பல்களுக்கு நடுக்கடலில் எரிபொருள் நிரப்பும் இலங்கை -இந்தியா கடும் அதிருப்தி.
03 Nov,2022
சீனாவின் போர்க்கப்பல்களிற்கு இலங்கை நடுக்கடலில் எரிபொருள் நிரப்புவது குறித்து இந்தியா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்த போதிலும் சீனாவின் ஏவுகணை கண்காணிப்பு கப்பலான வாங் யுவாங் 5 அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரிப்பதற்கு இலங்கை அனுமதி வழங்கியதை தொடர்ந்து இலங்கை தனது துறைமுகத்தில் போர் மூலோபாய கண்காணிப்பு கப்பல்களிற்கு அனுமதி வழங்கக்கூடாது என இந்தியாவும் அமெரிக்காவும் தெளிவாக தெரிவித்துள்ளன.
சீனா குத்தகைக்கு எடுத்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து எரிபொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும் எரிபொருட் கப்பல்கள் சீனாhவின் போர்க்கப்பல்களிற்கு நடுக்கடலில் வைத்து மறைமுகமாக எரிபொருட்களை நிரப்புகின்றன என இந்தியா தெரிவித்துள்ளதுடன் இது குறித்து இலங்கையிடம் கடும் கரிசனை வெளியிட்டுள்ளது.
கப்பல்களை தனது துறைமுகத்திற்குள் அனுமதிப்பது மற்றும் அவற்றிற்கு எரிபொருள் நிரப்புவது போன்ற விடயங்களில் வெளிப்படையான தராதர நடைமுறையை பின்பற்றவேண்டும் என இலங்கை இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் போர்க்கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் மீள எரிபொருளை நிரப்புவதற்கும் அனுமதிக்கவேண்டாம் என இந்தியா இலங்கையிடம் தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டையிலிருந்து எரிபொருளுடன் செல்லும் இலங்கை கப்பல்கள் இந்திய அமெரிக்க கரிசனைகளை புறக்கணித்து சீன போர்க்கப்பல்களிற்கு எரிபொருளை வழங்குகின்றன என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஆபிரிக்க கடலோர பகுதியில் கடற்கொள்ளையர்களிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சீன கப்பல்களை தவிர தற்போது இந்து சமுத்திரத்தில் எந்த சீன கப்பல்களும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
சீன போhக்கப்பல்கள் தொடர்ந்தும் கிழக்கு ஆபிரிக்க கடலோரம் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன ஆனால் அந்த பகுதியில் கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகள் எதுவுமில்லை. துறைமுகத்தை கைப்பற்றுவதற்காக கடற்கொள்ளையர்களிற்கு எதிரான நடவடிக்கை என சீனா சாக்குப்போக்கு சொல்கின்றது என சீனாவை அவதானிப்பவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.