விடுதலைப் புலிகளுக்கு நேசக் கரம்
ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் முதல் தடவையாய் விடுதலைப் புலிகளுக்கு நேசக் கரம் நீட்டி இருக்கிறது இந்திய அரசு. இந்த நேசக்கரத்திற்குள் ஒளிந்திருக்கிறது உலகளாவிய இராஜதந்திரம்.
இதுகுறித்து தமிழீழ ஆதரவாளர்கள் தெரிவிக்கையில், “ஒக்டோபர் 10 ஆம் திததி டெல்லியை தலைமையிடமாக கொண்ட தமிழர்கள் சமூக நல அறக்கட்டளையும், லண்டனைச் சேர்ந்த சிறுதுளி அறக்கட்டளையும் இணைந்து டெல்லி இராஜேந்திர பவனில் ஈழத் தமிழர்களின் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
லண்டனில் வாசிக்கும் ஈழத் தமிழர் நிலா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத்தில் இருக்கும் ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் துளசி, செயலாளர் கதிர், வெளியுறவுத்துறை பொறுப்பாளர் நெல்சன், மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் நடுவேல், கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ஆகியோரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஐந்து பேருமே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் விடுதலைப் புலிகளை அடியோடு வெறுக்கத் தொடங்கிய இந்தியா விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடையும் விதித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் வேட்டையாடப்பட்டனர்.
இந்த நிலையில் சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மாஜி விடுதலைப் புலிகளுக்கு விசா கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுடன், சில வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியது சர்வதேச தமிழர்கள் மத்தியில் பரபரப்பாகியுள்ளது.
இலங்கையில் சீன ஊடுருவலை தடுக்க தமிழீழம் அமைப்பது தான் இந்தியாவுக்கு பாதுகாப்பு என்று இந்தக் கூட்டத்தில் வெளிப்படையாக பேசப்பட்டுள்ளது” - என்றனர்.
இந்த நிலையில், ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் துளசி இது தொடர்பில் தெரிவிக்கையில், “விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் தலைமையில் யுத்த களத்தை சந்தித்த போராளிகள் 2009க்கு பின் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்பி தேர்தல் அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள்.
இப்போது இந்தியாவும் மாறி விடுதலைப் புலிகளான எங்களுக்கு விசா கொடுத்து ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதித்திருக்கிறது.
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாங்கள் பா.ஜ.கவைச் சேர்ந்த சில சட்ட வகுப்பாளர்களை சந்தித்தோம். அவர்களிடம் சமஸ்டி அமைப்பை அமைப்பதே ஈழத் தமிழர்களுக்கு தீர்வு, அதற்காக 13 ஆவது சட்ட திருத்தத்தை செயற்படுத்த வேண்டும், வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும், தொல்லியல் துறையினர் ஆய்வு என்கின்ற பெயரில் எங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பதை தடுக்க வேண்டும், ஜனநாயக வழிக்கு திரும்பி இருக்கும் விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கும் விதமாக விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்கிற கருத்துக்களை வலியுறுத்தியிருக்கிறோம்.
35 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா எங்களுக்கு நேசக் கரம் நீட்டியிருக்கிறது. அதை வலுவாய் பற்றிக்கொண்டு ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்போம்.
இலங்கை எப்போதுமே இந்தியாவுக்கு சாதகமாய் இருந்ததில்லை. சீனா மற்றும் பாகிஸ்தான் போர்களில் இந்திய எதிர்ப்பு நிலையைத் தான் அது எடுத்தது.
இப்போது தென்னிலங்கையை தன் கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்திருக்கும் சீனா இனிமேல் தமிழர்கள் வாழும் வட கிழக்கு மாகாணங்களில் ஊடுருவ முயற்சிக்கும். கடலட்டை தொழிற்சாலை என்கிற பெயரில் வடகிழக்கு கடல் பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது சீனா.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் காலத்தில் இடம்பெற்ற சில கசப்பான உண்மைகளை மறந்து இந்தியா நீட்டியிருக்கும் நேசக்கரத்தை பற்றி எழ நாங்கள் தயார். இன்னொரு ஆயுதப் போராட்டத்திற்கு சாத்தியமில்லை. யாரும் ஆயுதப் போராட்டத்திற்கு தயாராய் இல்லை. தேர்தல் பாதை தான் சிறந்த வழி” - என்றார்.
ஆலோசனை கூட்டத்தை நடத்திய நிலா இது தொடர்பில் கூறுகையில், “கடந்த ஆறு மாதமாய் திட்டமிட்டு மிகச் சிறப்பாய் நடந்திருக்கிறது ஈழத் தமிழர்கள் நலன் சார்ந்த ஆலோசனைக் கூட்டம்.
இந்தியாவில் தேசிய பாதுகாப்புக்கு ஈழத்தமிழர் பாதுகாப்பு முக்கியம். எனவே தான் நாங்கள் பாஜகவைச் சேர்ந்த சில கொள்கை வகுப்பாளர்கள் வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்து பேசியிருக்கிறோம். தொடர்ந்தும் பேசி வருகின்றோம்.
தமிழ்நாடு எங்களின் தாய் மடி. ஓடி விளையாடும் இடம். எங்கள் தலைவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட அனைவரும் தமிழ்நாட்டிலிருந்த வரையிலும் பாதுகாப்பாக இருந்தார்கள். ஈழம் சென்ற பிறகே கொல்லப்பட்டார்கள். எனவே எங்களுக்கு மத்திய அரசு மற்றும் வெளியுறவுத்துறையின் ஆதரவு அவசியம்.
150 ஆண்டுகளுக்கு முன்னர் பிழைக்கப்போனவர்கள் தனி நாடு கேட்கலாமா என்று சிலர் சந்தேகம் எழுப்புகின்றார்கள். அவர்களுக்கு வரலாறு தெரியவில்லை. அவர்களுக்கு தமிழர்கள் தான் இலங்கையின் பூர்விகக் குடிகள் என்பதற்கான ஆதாரங்களை கொடுத்திருக்கிறோம்.
இன்று இலங்கையில் சீன ஊடுருவல் அதிகரித்து இந்திய தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. சீன ஊடுருவலைத் தடுக்க ஈழத் தமிழர்களால் மட்டுமே முடியும். ஈழத் தமிழர்கள் தான் இந்தியாவின் பாதுகாப்புக் கவசம்.
24 சதவிகிதமாக இருந்த ஈழத் தமிழர்களின் மக்கள் தொகை இன்று 12 சதவிகிதமாய் குறைந்திருக்கிறது. இதை சரிப்படுத்த என்ன வழி? ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு என்ன? என்கின்ற கலந்துரையாடல் தான் நடைபெற்றது.
புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு தமிழீழம் ஒன்றே தீர்வு.
இந்தியாவோ 13ஆவது சட்டத் திருத்தம் தான் தீர்வு என்கிற பல கருத்துக்கள் இருக்கின்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவிற்குப் பின் தமிழக தலைவர்கள் சிலர் தாங்கள்தான் ஈழத் தமிழர்களின் பாதுகாவலர் என்கின்ற மனநிலையுடன் செயற்பட்டு வருகின்றனர்.
இது தவறு. எங்களுக்கு தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, நாம் தமிழர் என அனைத்து தரப்பினரது ஆதரவும் தேவை. வரும் காலங்களில் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஈழத் தமிழர் கலந்துரையாடல் கூட்டம் நடக்கும்.
டெல்லியில் இந்தக் கூட்டத்தை நடத்தியதன் மூலம் எங்களை இந்தியாவின் கைப்பாவை, உளவுத்துறை, சதி என்கிறார்கள். சொல்பவர்கள் சொல்லட்டும். எங்களைப் பொறுத்தவரை ஈழத் தமிழர் நலம் தான் முக்கியம்” - என்றார்.
நன்றி -குமுதம்