தமிழ் மக்கள் இந்த ஆண்டுடன் விழித்துக் கொள்ளவில்லையென்றால் ,தமிழ்த் தேசியம் முழுமையாக பறிபோகும் என நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்:
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.புதிய அரசியல் அமைப்பு உருவாக்குவது தொடர்பாகவும்,அதன் ஊடக இனப் பிரச்சினைக்கு தீர்வு தருவதாகவும்,அதற்கு ஒரு வருட காலம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.அந்த அறிவிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
அன்று ரணில் பிரதமராக இருந்த காலத்தில்,அரசியல் அமைப்புச் சபை உருவாக்கப்பட்டு,திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டது.அதை நாம் நன்றாக படித்து,இந்த புதிய அரசியல் அமைப்பு ஒற்றை ஆட்சியை தான் பிரதிபலிக்கிறது அதை நிராகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தோம்.நாம் நிராகரித்த ஒன்றைத் தான்,இப்போது வேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அன்றே இந்த “ஏக்கிய இராஜ்ச்சிய” பிரச்சினை வந்தது.ஒற்றை ஆட்சி என்ற சொல் தமிழிலே நீக்கப்பட்டு,யூனிடேரி ஸ்டேட் என்ற சொல் ஆங்கிலத்தில் நீக்கப்பட்டு,சிங்களத்தில் ஏக்கிய இராஜ்ச்சிய என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு குழப்பத்தில் முடிந்தது.
நாம் போராடி ஒரு இலட்சம் உயிர்களை இழந்தது இந்த ஒற்றை ஆட்சி வேண்டாம் என்று தான்.அதனை ஒருமித்த நாடு என்ற பக்கத்தில் கொண்டு வருவதற்கு சுமந்திரன் நினைக்கிறார்.மக்களை மீண்டும் அடிமையாக மாற்றுவதற்கும்,தேர்தல் காலத்தில் மக்களை பயன்படுவதற்கும் தமிழ் தரப்புகள் முயற்சி செய்து வருகின்றனர்.தமிழ் மக்கள் துஷ்பிரயோகம் செய்து,ஏமாற்ற வேண்டும் என்பது இவர்களின் எண்ணம்.
ஆகவே தான் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வந்ததிலிருந்து ,பல விடயங்களை நாம் மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றோம்.அதில் ஒன்று தான் இப்போது சீனா ,இந்திய உள்ளிட்ட நாடுகளின் கைப்பிடியில் இருப்பது.இதை நாம் அன்று கூறும் போது யாரும் நம்பவில்லை.இப்போது எல்லாமே அவர்களின் ஆளுகையின் கீழ் தான் இங்கே நடைபெறுகிறது.
இது தவிர இன்னுமொரு தரப்பு இப்போது வேறு ஒரு வேலை செய்கிறது.எமக்காக தியாகம் செய்த போராளிகளின் உணர்வுகள் மதிக்கப்படவில்லை.விடுதலை போராட்டத்தின் அடிப்படையை மாற்றி அமைக்க நினைக்கிறார்கள்.ஒரு சிலர் போராளிகளின் பெயரை பயன்படுத்தி இப்படி பலவற்றை மாற்ற நினைக்கிறார்கள்.ஆனால் நாம் எமக்காக போராடியவர்களுக்கு,பொருளாதார ரீதியில் ஏதும் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றோம்.
இராஜபக்ச அரசை வெளியேற்ற மும்மரமாக இருந்த ,வெளிநாட்டு தரப்பு இனி ரணிலுக்கு நெருக்கடி கொடுக்கப்போவதில்லை.ரணிலை வைத்து தமது காரியங்ளை நகர்த்தப்போகிறார்கள்.அப்படியான நிலையில் அவரைக் காப்பாற்றுவதற்கு தமிழ்த் தேசியம் பலியிடப்படும்.ஆகவே அவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை.
இரண்டு வருடத்துக்கு முதல், மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கி ஆட்சியை வழங்கிய சிங்கள மக்களே,அவர்களை அடித்து துரத்தியுள்ளனர்.ஆனால் இப்படியான செயல்பாட்டை தான் தமிழ் தரப்புகள் செய்து கொண்டு இருக்கின்றன.இதற்கு தமிழ் மக்கள் தான் பலியாவார்கள்.ஆகவே இந்த வருத்தத்துடன் தமிழ் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்றார்