இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 21 மாலை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில், இந்தத் திருத்தத்துக்கு ஆதரவாக 179 வாக்குகள் கிடைத்தன. எதிராக ஒரு வாக்கு மட்டும் அளிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் அதிகாரங்களில் சிலவற்றைக் குறைத்து, அவற்றினை நாடாளுமன்றம் மற்றும் அரசியல் பேரவை போன்றவற்றுக்குக் கையளிக்கும் வகையில் இந்தத் திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவற்றின் தவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், 22ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளமையை வலியுறுத்தினார்.
"சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவின்றி பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது எனும் நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். எமக்குக் கிடைத்த தகவலின் படி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி, ஜிஎஸ்பி வரிச் சலுகை போன்றவை இலங்கைக்கு கிடைப்பது, 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியுள்ளது என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன்" என நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
மீண்டும் செல்வாக்குப் பெறுகிறதா ராஜபக்ஷ குடும்பம்?
இலங்கை கடல் பகுதியில் மீண்டும் ஒரு சீன கப்பல் - என்ன காரணம்?
இலங்கை கடன்: கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்கும் வங்கதேசம் - கை கொடுக்குமா சீனா?
கடுமையாக விமர்சிக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பெயர் குறிப்பிடாமல் மிகக்கடுமையாக விமர்சித்து நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ பேசியமையும் குறிப்பிடத்தக்கது.
22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை முடித்து வைத்துப் பேசிய அவர், முன்னாள் ஜனாதிபதி மேற்கொண்ட தான்தோன்றித்தனமான தீர்மானங்களினால், நாடாளுமன்த்தில் உள்ள 225 உறுப்பினர்களும் இன்னலுக்கும் இகழ்ச்சிக்கும் உள்ளானதாகக் குறிப்பிட்டார்.
"20ஆவது திருத்தத்துக்குப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் நிர்க்கதி நிலைமைக்கு உள்ளானார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக கைகளை உயர்த்தியமையினால், அவர்களின் அதிகாரங்கள் முற்றுமுழுதாக இழக்கப்பட்டு, இந்த நாடாளுமன்றத்துக்குள்ளே அவர்களும் பாதிக்கப்பட்டவர்களாக மாறினர்."
"நிறைவேற்றுத்துறை (ஜனாதிபதி) தான்தோன்றித்தனமாக மேற்கொண்ட தீர்மானங்களினால், நாட்டில் வரி வருமானத்தை இழந்தோம், உரம் இல்லாமல் போனது, எரிபொருள், சமையல் எரிவாயு போன்றவை இல்லாமல் போயின. இந்த நாடாளுமன்றத்தை நாட்டு மக்கள் சபிக்கத் தொடங்கினார்கள்".
"எந்தவொரு தீர்மானமும் நாடாளுமன்றத்தினால் எடுக்கப்பட்டவையல்ல. தனிநபர் ஒருவரினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்காக நாடாளுமன்றம் கொச்சைப்படுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஏன் இப்படியெல்லாம் நடந்தன?
இந்த நாடாளுமன்றத்துக்கு இருக்கின்ற தத்துவங்களை நாங்கள் பொறுப்பில்லாமல் ஒரு தனிநபரின் கைகளுக்குக் கொண்டு சேர்த்ததன் விளைவாகத்தான் இந்த நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேரும் இன்னலுக்கு உள்ளானார்கள். இகழ்ச்சிக்கு உள்ளாகினர். இந்த நிலைமையிலிருந்து விடுபடுவதற்காகத்தான் 22ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்தோம்," என நீதியமைச்சர் இதன்போது கூறினார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசியக் கூட்மைப்பு ஆகிய எதிர்க் கட்சிகளும் வாக்களித்தன.
மேற்படி சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 179 வாக்குகள் கிடைத்திருந்தன. எதிராக ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர மட்டும் வாக்களித்தார்.
2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் சரத் வீரசேகர வாக்களித்திருந்தமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
ஜனாதிபதியின் பெருமளவு அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்கு கையளிக்கும் வகையில், மைத்திரிபால சிறிசேன ஆட்சிக் காலத்தில் 19வது திருத்தம் கொண்டுவரப்பட்டது.
22ஆவது திருத்தத்தில் உள்ளவை என்ன?
நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட 22ஆவது திருத்தச் சட்டம், ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் சிலவற்றைக் குறைத்துள்ளன. ஜனாதிபதியின் சில அதிகாரங்களை அரசியல் பேரவையுடன் சேர்த்து விட்டுள்ளது. மேலும் தேசிய தேர்தல் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு, தேசிய போலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை இரட்டைப் பிரஜாவுரிமையுள்ளோர் நாடாளுமன்ற உறுப்பினராகுவதற்கான சந்தர்ப்பம், இந்த திருத்தத்தின் மூலம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
இரட்டைப் பிரஜாவுரிமையுள்ளோர் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதைத் தடுக்கும் வகையிலான ஏற்பாடு 22ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதை சில தினங்களுக்கு முன்னர் சுட்டிக்காட்டிப் பேசியிருந்த, ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகல காரியவசம் எம்பி பசில் ராஜபக்ஷவை இலக்கு வைத்து, இந்தத் திருத்தச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
தற்போது 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இலங்கை மற்றும் அமெரிக்க பிரஜாவுரிமைகளைக் கொண்டுள்ள பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் அவரின் சகோதரரான பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக இருந்தார். அந்தக் காலப்பகுதியில் மக்கள் போராட்டம் ஏற்படுத்திய அழுத்தங்களை அடுத்து, அவர் தனது அமைச்சுப் பதவி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜிநாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும் 'பசில் ராஜபக்ஷ மீண்டும் நாடாளுமன்றம் வருவார்' என்கிற பேச்சு, அரசியலரங்கில் பரவலாக இருந்துவந்த நிலையிலேயே, இரட்டைப் பிரஜாவுரிமையுடையோர் நாடாளுமன்ற உறுப்பினராக முடியாதவாறு 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
19ஆவது திருத்தத்தில் இரட்டைப் பிரஜாவுரிமைகளைக் கொண்டோர், நாடாளுமன்ற உறுப்பினராகுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை கோட்டாபய ராஜபக்ஷ 20ஆவது திருத்தத்தின் மூலம் இல்லாமல் செய்தார். அதன் காரணமாகவே, இரட்டைப் பிரஜாவுரிமையினைக் கொண்ட பசில் ராஜபக்ஷ, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
இதேவேளை, 22ஆவது திருத்தின் மூலம், நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களில் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
19ஆவது திருத்தத்தில் நான்கரை வருடங்களுக்குப் பின்னரே நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 20ஆவது திருத்தத்தின் மூலம், இரண்டரை வருடங்களின் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடைத்தது. அது அவ்வாறே 22ஆவது திருத்தத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன்படி அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தின் பின்னர் தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குக் கிடைக்கும்.
வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதோர்
22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெற்றபோது நாடாளுமன்றில் 40க்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்றில் உரையாற்றிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிசி ஜயசேகர "அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளும் இந்தச் சந்தர்ப்பத்தில், அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு சென்றுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இருந்தபோதும் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரர் சமல் ராஜக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் பசில் ராஜபக்ஷவை நேரடியாகப் பாதிக்கும் 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
எதிராக வாக்களித்த சரத் வீரசேகர; அதற்குக் கூறிய காரணங்கள்
22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, வாக்கெடுப்புக்கு முன்னர் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையில் அரசியலபைப்புத் திருத்தம் இப்போது தேவையில்லை என்றும், புதியதொரு அரசியலமைப்புத்தான் தற்போது தேவையாக உள்ளது எனவும் கூறினார்.
"அரசியலமைப்புத் திருத்தம் பற்றி இங்கு பேசப்பட்டபோது; இது மக்களின் வேண்டுகோள் இதற்கு எதிராக செயற்பட வேண்டாம் என்றார்கள். அதனை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் கோரியது அரசியலமைப்புத் திருத்தத்தையல்ல, புதியதொரு அரசியலமைப்பினையே கோரினார்கள். கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த மக்கள் ஆணை, புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கானதாகும். எனவே, அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அல்ல, புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கே நாம் செல்ல வேண்டியுள்ளது" என்றார்.
"22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக, 19ஆவது திருத்தம் மீண்டும் வலுவுக்கு வருமாக இருந்தால், 22ஆவது திருத்தத்துக்கு நான் வாக்களிக்க மாட்டேன்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
"13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இருக்கும் வரை, ஜனாதியின் நிறைவேற்று அதிகாரத்தைக் குறைக்கும் எந்தவொரு திருத்தத்துக்கும் நான் வாக்களிக்க மாட்டேன்" எனவும் அவர் இதன்போது கூறினார்.
"இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம், பலவந்தமாகக் திணிக்கப்பட்டது" என இதன்போது குற்றஞ்சாட்டிய சரத் வீரசேகர "13ஆவது திருத்தத்தில் இருக்கின்ற ஏற்பாடுகளை நீக்க வேண்டும். 13ஆவது திருத்தத்திலுள்ள காணி மற்றும் போலிஸ் அதிகாரங்கள் நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையினைப் பாதிக்கும்" என்றார்.
"மத்தியில் நலிவுற்றதொரு அரசாங்கம் இருப்பதையே பிரிவினைவாதிகள் எதிர்பார்ப்பார்கள். 13ஆவது திருத்தம், 16ஆவது, 17ஆவது மற்றும் 19ஆவது திருத்தங்கள் அதைத்தான் செய்திருக்கின்றன. அதனால்தான் நான் 19ஆவது திருத்தத்தை எதிர்த்தேன்" எனவும் அவர் தனது உரையின் போது குறிப்பிட்டார்.