22 ஆவது திருத்தத்துக்கு விக்னேஸ்வரன் ஆதரவு!
21 Oct,2022
22ஆவது திருத்தத்துக்கு குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் முதல் படியாக அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் ஜனநாயக இலட்சினங்களை கொண்டிருந்தது என்றும் 22ஆவது திருத்தச் சட்டமூலம் முற்போக்கான விடயங்களை கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
22ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை. என்பதோடு, அமைச்சரவை நியமனம்,அமைச்சின் செயலாளர் நியமனம் உள்ளிட்ட முக்கிய பல நியமனங்கள் ஜனாதிபதிக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஒருசிலரின் அபிலாசைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் 22ஆவது திருத்த வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் 22ஆவது திருத்தச் சட்ட நிறைவேற்றம் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முதல் படியாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
எனவே, 22ஆவது திருத்தத்தில் காணப்படும் ஒருசில குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி அதற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.