நாட்டு மக்கள் மாற்றங்களை கோருகையில் மறுசீரமைப்பு என்ற பெயரில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து மக்களை ஏமாற்றுவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். பாராளுமன்றம் எங்களை தவறாக வழி நடத்தியுள்ளது என்று மக்கள் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு மாற்றங்களுக்கு முதலாவது படியென்று கூறி மக்களை ஏமாற்றுவதன் ஊடாக மக்கள் போராட்டம் வெடிக்கும். இந்த முயற்சியை நாங்கள் எதிர்க்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை முக்கியமான மறுசீரமைப்பாக கருதப்படுகின்றது. ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை.
இந்த திருத்தம் ஊடாக என்ன நடக்கப் போகின்றது. இந்த பாராளுமன்றத்தில் 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு வாக்களித்தவர்களே 18 ஆவது திருத்தத்திற்கும் வாக்களித்தனர். அதேபோன்று அவர்கள் 19 ஆவது திருத்தத்திற்கும் வாக்களித்ததுடன் பின்னர் 20 ஆவது திருத்தத்திற்கு வாக்களித்துவிட்டு இப்போது 22 ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கவும் தயாராகின்றனர். இவர்கள் ஓரிடத்தில் அல்லாது அங்கும் இங்குமாக ஊசலாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் சரத் வீரசேகரவை மதிக்கின்றேன்.
அவர் சரியோ பிழையோ அங்கும் இங்கும் செல்லாது ஒரே பக்கத்திலேயே இருக்கின்றார். அரசியலமைப்பின் 17, 18,19, மற்றும் 22 ஆகிய திருத்தங்களின் போது ஒவ்வொரு நேரமும் தவறு செய்துள்ளதாகவும் அதனை மாற்றுவதற்காகவே திருத்தங்களை மேற்கொள்வதாக கூறினீர்கள்.
இது என்ன விதமான பாராளுமன்றம். இங்குள்ள ஒவ்வொருவரும் இதனை தூக்கி வீசுங்கள் என்றே கூறுகின்றனர். எங்களை ஏமாற்றுகின்றீர்கள் என்றும்இ நீங்கள் வேடிக்கையாளர்கள் என்றும் கூறுகின்றனர்.
மக்கள் மாற்றமொன்றையே கோருகின்றனர். ஆனால் இந்த சபையில் இருக்கும் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் இதுவொரு மோசடியாகவே அமையும். முழுமையாக மாற்றமாக இருக்காது. மக்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறை தேவையில்லை என்றே கூறுகின்றனர்.
ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தல்களின் போதும்,நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகவே கூறியிருந்தனர். அவ்வாறுதான் முன்னர் ஒவ்வொரு திருத்தங்களும் வழங்கப்பட்டன.
இதேவேளை கோத்தாபய ராஜபக்ஷ அவ்வாறு வாக்குறுதியளிக்கவில்லை. ஆனால் அவர் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கூறியிருந்தார். தற்போதைய ஜனாதிபதி சில மாதங்களுக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பாக கூறியிருந்தார். 1994 ஆம் ஆண்டு முதல் இவ்வாறு கூறப்படுகின்றது.
ஆனால் அதனை செய்யவில்லை.மாற்றத்தை கோரிய மக்கள் நிறைவேற்றுத்துறையை இல்லாது செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.
21 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் 19 ஆவது திருத்தத்தையாவது கவனத்தில் கொள்ள வேண்டும். 20 ஆவது திருத்தம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை வரவேற்பது போன்றே இருந்நதது.
இந்நிலையில் நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்போம் என்று கூறுவது ஏமாற்று வேலையாகும். மக்கள் மாற்றங்களை விரும்பும் போது மறுசீரமைப்பு செய்வது போன்று பாசாங்கு செயற்பாடுகளில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாராளுமன்றம் எங்களை தவறாக வழிநடத்தியுள்ளது என்று மக்கள் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு மாற்றங்களுக்கு முதலாவது படியென்று கூறி மக்களை ஏமாற்றுவதன் ஊடாக மக்கள் போராட்டம் வெடிக்கும். இந்த முயற்சியை நாங்கள் எதிர்க்கின்றோம். மக்களை ஏமாற்றக் கூடாது.