ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
இதன் முதற்கட்டமாக, நல்லிணக்கம் தொடர்பிலான அமைச்சரவை உப குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த உபகுழுவை நியமிப்பதற்காக, ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக மற்றும் வடக்கு, கிழக்கு மோதல்களின் பின்னர் மீள்குடியேற்றம், காணி மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக ஜனாதிபதியினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் அங்கத்தவர்களாக பிரதமர் தினேஷ் குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நல்லிணக்கம் தொடர்பில் அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டமை குறித்து, பல்வேறு தரப்பினரும் தற்போது விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான காலத்தில், நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மாறி மாறி வந்த அரசாங்கங்கள் இவ்வாறான அமைச்சரவை உபகுழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்களை நியமித்த போதிலும், அவற்றினால் இன்று வரை எந்தவித தீர்வுகளும் கிடைக்கவில்லை என மக்கள் கூறுகின்றனர்.
தமிழர்களுக்கு சரியான தீர்வு கிடைக்கப் போவதில்லை எனவும், அதனாலேயே தாம் வெளிநாடுகளை நம்பியுள்ளதாகவும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ஜெயவனிதா
''இந்த அரசாங்கத்தை நாங்கள் எந்தவிதத்திலும் நம்பவில்லை. வெளிநாட்டை தான் நம்பியுள்ளோம். இந்த அரசாங்கம் என்ன தான் செய்தாலும், அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எந்த அமைச்சர்கள் வந்தாலும், ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் தான். எங்களின் ஒரே முடிவு வெளிநாடு தான். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை தான் நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம். அந்த நாடுகள் வந்தால் எங்களுக்கு சரியான தீர்வுகள் கிடைக்கும். இவர்கள் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள். யார் வந்தாலும், தமிழர்களுக்கு நீதி கிடைக்க போவதில்லை. எங்களின் பிள்ளைகள் குறித்து முடிவை சொல்ல போறதும் இல்லை. தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பாதுகாப்பு ஒன்று இருக்க வேண்டும். எங்களின் பிள்ளைகளை விட்டால் போதாது, எங்களுக்கு என்று ஒரு பாதுகாப்பு வேண்டும்" என காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவிக்கின்றார்.
இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் குழுக்கள் மீது தமக்கு நம்பிக்கை கிடையாது என அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் குறிப்பிடுகின்றார்.
''இலங்கையில் உபகுழுக்கள் நியமிப்பதும், ஆணைக்குழுக்கள் நியமிப்பதும் சாதாரண விடயங்கள். இதில் எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை என்பதை தான் நாங்கள் நீண்ட காலமாக சொல்லி வருகின்றோம். நாங்கள் ஒரு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதை சர்வதேசத்திற்கு காண்பிப்பதற்காகவே அரசாங்கம் இந்த குழுவை நியமித்துள்ளது. சர்வதேசத்திற்கான கண் துடைப்பே தவிர, எங்களுக்கு எந்தவிதமான நீதியும் கிடைக்காது. இலங்கையை இனி எந்த வகையிலும் நம்ப முடியாது" என அருட்தந்தை மா.சக்திவேல் குறிப்பிடுகின்றார்.
நல்லிணக்கம் தொடர்பில் ஏற்கனவே காணப்பட்ட உடன்பாடுகளை நடைமுறைப்படுத்தாமல், மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பது நாட்டை ஏமாற்றும் நடவடிக்கை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.
''குழு நியமனங்கள் நல்லது. குழு நியமனங்கள் என்பது முதல் நிலை செயற்பாடு. அது தொடர்ச்சியாக நடைமுறையிலேயே முன்னெடுக்கப்பட வேண்டும். அதன் பலன்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணரக்கூடியதாக இருக்க வேண்டும். வறுமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கின்றார்கள். இன ரீதியாக, மத ரீதியாக, மொழி ரீதியாக பாதிக்கப்பட்ட எண்ணிக்கையிலே தேசிய இனங்களை சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
தேசிய நல்லிணக்கம் என்பது, அவர்களை இலங்கையர்களாக சமத்துவமாக உள்வாங்கக்கூடியதாக இருக்க வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழு இலங்கையை ஒரு பன்முக நாடாக அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். சிங்கள பௌத்த நாடு என்ற நிலையில், இருந்துக்கொண்டு நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது என்ற உறுதியில் நான் இருக்கின்றேன். நல்லிணக்க ஆணைக்குழு என்பது மீண்டும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிப்பதாக இருக்கக்கூடாது.
1950களிலிருந்து பல்வேறு உடன்பாடுகளை இது குறித்து கண்டுள்ளோம். அந்த உடன்பாடுகளை கண்டு, அவை நடைமுறையாக்கப்படாமல் விடுப்பட்டுள்ளன. இடைவிடப்பட்ட இடத்திலிருந்து அதனை ஆரம்பிக்க வேண்டுமே தவிர, மீண்டும் ஆரம்பத்திலிருந்தே ஆரம்பிப்பது என்பது நாட்டை ஏமாற்றம் செயற்பாடாகும். அதனை நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்," என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.
அரசியலமைப்பில் உள்ள விடயங்களை முதலில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனவும், அதனூடாக தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் கடற்றொழில் அமைச்சரும், நல்லிணக்கம் தொடர்பிலான அமைச்சரவை உபகுழு உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார்.
''நான் அடிக்கடி தமிழ் தரப்பிற்கு சொல்வது, கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேநேரத்தில் சந்தர்ப்பங்களை உருவாக்கியும் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முதல் இருந்த நிலைமை வேறு. இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு பிறகு தமிழ் மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்புக்களை, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லியவர்கள், துரதிஷ்டவசமாக துஷ்பிரயோகம் செய்து விட்டார்கள். அண்மை வருகைத் தந்த சொல்ஹெய்ம் கூட அதனை சொல்லியிருக்கின்றார்.
இன்றைய நிலைமைக்கு ரணில் விக்ரமசிங்க தான் பொருத்தமானவர். ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை அமைத்திருக்கின்றார். அதில் நானும் இருக்கின்றேன். நான் இருக்கின்ற போது, என்னை மீறி அது போகாது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை அன்று ஏற்றுக்கொண்டிருந்தால், இந்தளவிற்கு பிரச்னை வந்திருக்காது. இலங்கையின் பன்முக தன்மையை வெளிப்படுத்தும் வகையில், அதற்குள் தமிழ், முஸ்லிம் மக்களை சேர்ந்துக்கொள்ள வேண்டும். முதலில் இருப்பதை நடைமுறைப்படுத்துவோம். புதிதாக ஒன்று என்றால், அது வரபோவதில்லை. அரசியலமைப்பில் உள்ள விடயங்களை நாடாளுமன்றத்தில் சட்டமூலம் கொண்டு வந்து, திருத்தங்களை மேற்கொண்டு, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்" என கடற்றொழில் அமைச்சரும், நல்லிணக்கம் தொடர்பிலான அமைச்சரவை உபகுழு உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.