மனிதருக்கு மனிதாபிமானம் கற்றுக்கொடுத்த குரங்கு - இறுதி கிரியையில் நெகிழ்ச்சி சம்பவம்!video
20 Oct,2022
மட்டக்களப்பில் குரங்கொன்று உயிரிழந்த நபர் ஒருவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளது.
குரங்கின் இந்த செயற்பாடு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காட்சி அரக்க குணம் படைத்தவர்களையும், ஒரு கணம் மனிதம் நிறைந்தவர்களாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாளங்குடா பகுதியில் 56 வயதுடைய பீதாம்பரம் ராஜன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரின் இறுதி சடங்கு நடைபெற்றது.
இந்நிலையில் அங்கு வந்த குரங்கு கண்ணீர் சிந்தியதுடன், அவருக்கு முத்தம் கொடுத்து தனது அஞ்சலியை செலுத்தியுள்ளது. குறித்த குரங்கு உயிரிழந்த நபரின் வீட்டிற்கு தினமும் செல்லம் போது அவர், உணவு கொடுத்து வந்துள்ளார்.
இவ்வாறான நிலையில் அவர் உயிரிழந்ததையடுத்து, இறுதி சடங்கு நடந்து கொண்டிருக்கும் போது அங்கு சென்ற குரங்கு அதனை அவதானித்துள்ளது.
தனக்கு உணவளித்துவந்தவர் சடலமாக படுத்திருப்பதை பார்த்த குரங்கு அவரின் பக்கம் சென்று அவரின் சட்டையை பிடித்து இழுத்து அவரை எழுப்ப பல முயற்சிகளை செய்துள்ளது.
எனினும் அவர் எழுந்திருக்காததை அறிந்த குரங்கு கண்ணீர் சிந்தியதுடன், அவரை முத்தமிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது.
அன்பு இரக்கம், பாசம் கொண்ட மனிதர்கள் இருந்தாலும், மனிதர்கள் மத்தியில் மனிதர்களே பொறாமை, கோபம் கொண்டுள்ள இக்காலகட்டத்திலும், சிறிது காலம் அவ்வப்போது உணவளித்த தமது எஜமானுக்காக இரங்கிய குரங்கின் செயல் மிகவும் மெச்சத்தக்கதாகும்.
மிருகங்களிடமிருந்து மனிதர்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது என குறித்த மரணக் கிரியையில் கலந்து கொள்ள வந்திருந்தவர்கள் தமக்குள்ளே முணுமுணுத்ததையும் இதன்போது அறிய முடிந்தது.