தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுவித்தல் உள்ளிட்ட ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்ட பின்னணியில் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கை தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த காலங்களில் சிறிலங்கா அரசாங்கம் இணங்கிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தவறிவந்த நிலையில், நேற்றைய தீர்மான நிறைவேற்றத்தின் பின்னர் சாதகமான பதிலை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுவிக்கும் வகையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதும் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக தினேஷ் குணவர்தன இன்று தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கைதிகளை விடுவிப்பதற்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்க தேவையான வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இலங்கை தனது உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியதால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை சிறிலங்கா எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாக பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கட்டார், ஐக்கிய அரபு இராட்சியம் போன்ற நாடுகள் மற்றும் மலேசியா, இந்தோனேஷியா போன்ற சில ஆசிய நாடுகளின் ஆதரவை கூட பெறுவதற்கு இலங்கை தவறியிருப்பது கவலையளிக்கிறது என்று பீரிஸ் கூறினார்.
எனினும் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை எனவும், சில நாடுகள் தமது நாடுகளின் சர்வதேச மற்றும் உள்நாட்டு கொள்கைகளை மதிக்கும் வகையில் வாக்களிப்பதில் இருந்து விலகியுள்ளதாக பிரதமர் தினேஷ் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் குறிப்பிட்ட நாடுகள் எடுக்கும் முடிவு இலங்கை தொடர்பான வர்த்தகம், உதவி அல்லது வேறு எந்த விடயத்தையும் பாதிக்காது என சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை வெளியிட்டார்.