பிச்சைக்கார நாடாக அறிவிக்கப்படவுள்ள இலங்கை
03 Oct,2022
இலங்கையை நடுத்தர வருமானம் கொண்ட நாடு என்ற தரத்தில் இருந்து குறைந்த வருமானம் கொண்ட நாடாக தரம் குறைப்பதற்கு உலக வங்கி யோசனை முன்வைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் இதுபோன்று கோரிக்கையை முன்வைத்திருந்த நிலையில், தற்போது உலக வங்கி அதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.
இலங்கை பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதுடன் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடன் மறுசீரமைப்புக்கான கோரிக்கைகள் வழங்கும் நாடுகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் சில தரப்பினர் அதற்கு இன்னும் உடன்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறைந்த வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்தப்படுவது, நெருக்கடியை சமாளிக்க உதவி மற்றும் குறைந்த வட்டியில் கடன்களை பெறுவதற்கு கூடுதல் சாதகமாக அமையும் என உலக வங்கி பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.
இந்த யோசனையை அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருகிறது.
குறைந்த வருமானம் கொண்ட நாடு என வகைப்படுத்துவது உதவிகளைப் பெறுவதில் சாதகமான சூழ்நிலையை உருவாக்கினாலும், முழுப் பொருளாதாரத்திலும் ஏற்படும் பாதிப்பை ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று அரசாங்கம் கருதுகிறது.