இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துக்கொண்ட 84 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு - நகர மண்டப பகுதியில் இன்று (செப்.24) பிற்பகல் சோசலிச இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சட்டத்தரணிகள், பௌத்த பிக்குகள், மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
"இளைஞர்களின் கனவுகளை புதைத்த ஆட்சியாளர்களே, அடக்குமுறையை சுருட்டிக்கொள்!" "உடனடியாக பதவி விலகு!" போன்ற கோஷங்களுடன் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
கொழும்பு - நகர மண்டப பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி, டின்சன் வீதி, மருதானை ஊடாக கோட்டை பகுதியை நோக்கி செல்ல ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
எனினும், ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்ட பகுதியிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்குள்ளேயே, போலீஸார் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.
ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தாலும், இன்று வழமைக்கு மாறாக ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், சுகாதார அமைச்சுக்கு அண்மித்த பகுதியில் வைத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் ஆகியவற்றை நடத்தியிருந்தனர்.
கொழும்பு ஆர்ப்பாட்டம்
நீர்த்தாரை பிரயோகத்தை போலீஸார் மேற்கொண்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை எதிர்த்து முன்னோக்கி நகர ஆரம்பித்த பின்னணியில், கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டது.
புத்த பிக்குகள் கைது
இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் விரட்டியடித்தனர்.
இவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பிக்குகளும், 4 பெண்களும் அடங்குவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், ஆர்ப்பாட்டம் கலைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சிலர் காயமடைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகரின் பல பகுதிகள் அதிவுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம்
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளை அதிவுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் (செப்.23) வெளியிட்டார்.
இதன்படி நாடாளுமன்ற கட்டிடத் தொகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், உயர்நீதிமன்றம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகையில், கடற்படை தலைமையகம், போலீஸ் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு, ராணுவ தலைமையகம், பிரதமர் அலுவலகம், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரிமாளிகை மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை தளபதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் ஆகிய பகுதிகள் அதிவுயர் பாதுகாப்பு வலயங்களாக நேற்று முதல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்புவில் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டவர்கள்
இதேவேளை, நாட்டில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி, கையெழுத்து பெறும் நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.