சிறிலங்கா அரசாங்கம் படுகொலை குற்றவாளி - ஹேக் மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு
20 Sep,2022
இலங்கை, மெக்சிகோ மற்றும் சிரியாவில் உள்ள ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் அந்தந்த அரசாங்கங்கள் மீது நெதர்லாந்தில் உள்ள மக்கள் தீர்ப்பாயம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக நெதர்லாந்தில் உள்ள மக்கள் தீர்ப்பாயம் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததோடு இது தொடர்பான குற்றப்பத்திரிகையை நேற்று வெளியிட்டுள்ளது.
கொழும்பின் புறநகர் பகுதியான ரத்மலான பகுதியில் வைத்து சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபகரும், ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக நெதர்லாந்தில் உள்ள மக்கள் தீர்ப்பாயம் சிறிலங்கா அரசாங்கம் மீது குற்றம் சுமத்தியுள்ளது.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற இந்தப் படுகொலைச் சம்பவத்தின் பின்னணியில், அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்சவே இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், நெதர்லாந்தின் மக்கள் தீர்ப்பாயம் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளது.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மரணத்திற்கு காரணமான சர்வதேச மனித உரிமை மீறல்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் குழுவின் நீதிபதி எடுவார்டோ பெர்டோனி (Eduardo Bertoni) தெரிவித்துள்ளார்.
லசந்த விக்ரமதுங்கவின் கருத்து சுதந்திரத்தை சிறிலங்கா அரசாங்கம் மீறியுள்ளதாக நீதிபதி மார்டினா போர்டி (Martina Forti) தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 12ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாய அமர்வில், 2004 முதல் 2010 வரையிலான காலப்பகுதிக்குள் கொல்லப்பட்ட 27 ஊடகவியலாளர்கள் மற்றும் 17 ஊடக பணியாளர்கள் தொடர்பான விசாரணையின் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற போரின் போது தமிழர்களுக்கு ஆதரவளித்ததாகவும் சிறிலங்கா அரசாங்கத்தை விமர்சித்ததாகவும் கூறி குறித்த ஊடகவியலாளர்களின் கொலைகள் சரிவர விசாரிக்கப்படவில்லை என்பதோடு குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக்கொடுக்க தவறிய நீதியை மக்கள் தீர்ப்பாயம் பெற்று கொடுத்துள்ளதாக மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க கூறியுள்ளார்.
மக்கள் தீர்ப்பாயம் பெற்றுக் கொடுத்த தீர்ப்பு புதிய பலத்தையும், நம்பிக்கையையும் அளித்துள்ளதோடு குற்றங்களை செய்பவர்கள் நீதியிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளதெனவும் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார் .