இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களினதும் தமிழ் பேசும் மக்களினதும் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இங்குள்ள மாவட்டங்களைக் கூறுபோடும் நடவடிக்கையை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருக்கோணேஸ்வரம் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
“அண்மைக் காலங்களில் சில முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர நான் விரும்புகின்றேன்.
திருக்கோணேஸ்வரம் பிரெட்ரிக் கோட்டையின் உட்புறத்தே அமைந்துள்ளது. கோட்டையின் முன் பக்கத்திலுள்ள பிரதான நுழைவாயிலின் ஊடாக இப் பகுதியினுள் நாம் செல்லலாம். சில தசாப்தங்களுக்கு முன்னர், பிரெட்ரிக் கோட்டையின் ஒரு பகுதியில் தங்கியிருந்த இராணுவச் சிப்பாய்கள் சிலர் தாம் தங்கியிருந்த நிலப்பகுதியில் புத்தர் சிலையொன்றை நிர்மாணித்தனர்.
திருக்கோணேஸ்வரத்தையும் புத்த பெருமானையும் வழிபட விரும்பிய மக்கள் இப் பிரதான நுழைவாயிலின் வழியாக கோட்டையினுள் சென்று வழிபாடு செய்தனர். கோட்டைக்குள் நுழைந்து புத்தபெருமானையும் கோணேஸ்வரரையும் வழிபடுவதற்கு வேறு வழிகள் ஏதும் இருக்கவில்லை.
அண்மைக் காலங்களில் புத்தபெருமானின் சிலைக்கும் அங்கிருந்து திருக்கோணேஸ்வரத்துக்கும் ஒரு புதிய பாதை திறக்கப்பட வேண்டுமென்று முன்மொழிவொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தேவையற்றது என்பதோடு, ஆட்கள் இவ் வழியில் அத்துமீறுவதற்கும் அக் காணியில் தங்கியிருப்பதற்கும் வழிவகுக்கும்.
அது திருக்கோணேஸ்வரம் கோயில் மற்றும் புத்த பெருமானின் சிலை ஆகியவற்றின் புனிதத்தன்மையும் பக்தி உணர்வும் குறைவடைவடைவதற்கே வழிவகுக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரினால் இரத்தினபுரியிலிருந்து சில வர்த்தகர்கள் கொண்டுவரப்பட்டு, கோணேஸ்வரத்துக்கான பாதையில் அமர்த்தப்பட்டனர். அது இப்பகுதியின் புனிதத்தன்மையும் பக்தி உணர்வும் குறைவடைவடைவதற்குக் காரணமாகியது.
இந்தத் தற்காலிக கட்டடங்களில் இந்த நபர்களால் இறைச்சியும் மீனும் சமைக்கப்பட்டன. இப் பகுதியிலிருந்து இந் நபர்கள் அகற்றப்பட வேண்டும் என்று தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டது. எனினும், அது அமுல்படுத்தப்படவில்லை.
புத்தபெருமான் சிலை உள்ள பகுதியில் திருக்கோணேஸ்வரம் வரையிலான இப் புதிய பாதை திறப்பு நிறுத்தப்பட வேண்டுமென நான் விநயமாகக் கேட்டுக்கொள்கின்றேன். இல்லையேல் இது தீங்கு இழைக்கப்படுவதற்கே வழிவகுக்கும்.
ஒரு சர்வதேச உடன்படிக்கையான இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்கீழ், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களினதும் தமிழ் பேசும் மக்களினதும் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள ஒரு பெரும் நிலப்பரப்பு திருகோணமலை மாவட்டத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக வட மத்திய மாகாணத்திலுள்ள அநுராதபுர மாவட்டத்திலிருந்து ஒரு பெரும் நிலப்பரப்பு பதிலீடு செய்யப்படவுள்ளது என எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதன்மையான நோக்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இனத்துவ நிலத் தொடர்ச்சியைத் துண்டிப்பதாகும்.
பொலனறுவை மாவட்டத்திலிருந்து பெரும் நிலப்பரப்பொன்றை கிழக்கு மாகாணத்துக்குள் கொண்டுவரும் அதேவேளை, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலிருந்து பெரும் நிலப்பரப்பொன்றை பொலனறுவை மாவட்டத்தோடு இணைக்கும் அதே போன்றதொரு முன்மொழிவு திருகோணமலையின் தெற்குப் பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளது.
இது, பாரதூரமான எதிர்வலைகளையும் உலகில் இரண்டாவது மிகச் சிறந்த துறைமுகமாக கருதப்படும் திருகோணமலைத் துறைமுக்துக்குப் பாரதூரமான பின்விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய சாத்தியத்தோடு, வடக்கு மற்றும் தெற்கின் கடல்சார் எல்லைகள் ஊறுபடுவதற்கும் வழிவகுக்கும்.
இப் பகுதிகளில் வாழுகின்ற தமிழ்ப் பேசும் மக்களோ அல்லது எமது அயல்நாடோ அல்லது மிக அருகில் உள்ள நாடுகளோ இந்த நடவடிக்கையை அங்கீகரிக்கமாட்டாது.
திருகோணமலை மாவட்டத்தின் வடக்கிலும் தெற்கிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கிடையில் இனத்துவ நிலத் தொடர்ச்சியை இல்லாது செய்வதே இதன் முழு நோக்கமாகும்.
கிழக்கு மாகாணத்தை ஒரு சிங்கள பெரும்பான்மை மாகாணமாக மாற்றியமைப்பதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான இனத்துவ நிலத் தொடர்ச்சியை துண்டிப்பதும் பேரினவாத சிங்கள அரசுகளின் நீண்டகால குறிக்கோளாக இருந்து வருகின்றது.
வடக்குப் பகுதியில் வடமத்திய மாகாணத்தில் உள்ள அநுராதபுர மாவட்டத்திலிருந்தும், தெற்குப் பகுதியில் வட மத்திய மாகாணத்தின் பொலன்னறுவையிலிருந்தும் காணியைக் கொண்டுவருவது கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களை பெரும்பான்மையினராக அதிலும் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் ஒரு பெரும்பான்மையினராக ஆக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
இம் முயற்சிகள் அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையினராகக் கொண்டதாகும் என்பதோடு, எந்தவொரு மாவட்டமும் சிங்கள பெரும்பான்மை மாவட்டமாக இல்லை.
இது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை தமது வரலாற்று ரீதியான வாழ்விடப் பிரதேசங்களாகக் கொண்ட தமிழர்கள் தமிழ்பேசும் மக்கள் ஓர் ஐக்கிய மற்றும் பிரிபடாத இலங்கை என்ற வரையறைக்குள் உள்ளக சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடைய ஒரு மக்கள் குழுவினர் ஆவர் என்ற நிலைப்பாட்டுக்கு அமைவானதாகும். இதனையே தமிழர்கள், தமிழ்பேசும் மக்கள் ஓர் அரசியல் தீர்வாகக் கோரி நிற்கின்றனர்.
இந் நிலைப்பாடு 1956ஆம் ஆண்டிலிருந்து அனைத்து ஜனநாயகத் தீர்ப்புகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரச்சினையை நீடிக்கச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைவிட, இந்த அடிப்படையில் இப்பிரச்சினை தீர்த்து வைக்கப்பட வேண்டுமென நான் பலமாக வலியுறுத்துகின்றேன்” என்றுள்ளது.