தமிழர்களை அடக்கி ஆளவே இலங்கையில் இராணுவ செலவினம்..!
17 Sep,2022
தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்துள்ள இலங்கை அரசு, தனது மொத்த செலவீட்டில் 15 வீதத்தினை இராணுவத்துக்கு செலவிடுவதானது, தமிழர்களை அடக்கி ஆளவே என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா மனித உரிமைச்சபையில் இடித்தரைத்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 51வது கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் அமர்விலும் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் லிங்கஜோதி ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரது இலங்கை தொடர்பிலான அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தனது 1.86 மில்லியன் டொலர் செலவீட்டில் 15 வீதத்தினை இராணுவ செலவினங்களுக்கு ஒதுக்குவதனை சுட்டிக்காட்டி, இராணுவச் செலவினம் குறைப்பீடு செய்யப்பட வேண்டியது மட்டுமன்றி, தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் குறைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக அதன் இராணுவச் செலவினங்களே அமைகின்றன என்பதனை பல மாதங்களாகவே சுட்டிக்காட்டி வந்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,
ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினை தொடர்சியாக வலியுறுத்தி வந்திருந்த நிலையில் ஆணையாளரின் அறிக்கையும் இந்நிலைப்பாட்டுக்கு வலுவூட்டியிருந்தது.