இலங்கை தமிழ் அரசியல் கைதிகளை 4 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த உறவினர்கள்
இலங்கையில் நடந்த 30 வருட உள்நாட்டு யுத்த காலப் பகுதி மற்றும் அதனை அண்மித்த காலப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க 4 வருடங்களின் பின்னர் அவர்களின் உறவினர்களுக்கு இன்று (செப்டெம்பர் - 11) வாய்ப்பு வழங்கப்பட்டது.
கொழும்பு - மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 29 கைதிகளை சந்திப்பதற்கு இன்று வாய்ப்பு வழங்கப்பட்டதாக 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இன்று கொழும்பிற்கு வருகை தந்து, சிறைச்சாலையிலுள்ள தங்கள் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
சுமார் 10 முதல் 27 வருடங்கள் வரையான காலம் சிறைச்சாலைகளில் 46 தமிழ் அரசியல் கைதிகளாக வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
தமது பேரப் பிள்ளைகளை இதுவரை கண்டிராத, தமது மருமகள்களை இதுவரை கண்டிராதவர்களும் சிறைச்சாலைகளில் உள்ளதாக முருகையா கோமகன் தெரிவிக்கின்றார்.
''தமிழ் அரசியல் கைதியாக இருக்கின்ற ஒருவரின் தலையில் முடிகூட இல்லை. அவரது தலையில் அவரது பேரப்பிள்ளை பொம்மை காரை உருட்டி விளையாடியது. உண்மையில் மனதுக்கு சரியான வேதனையாக இருந்தது. அந்த பிள்ளைகளின் பாசம், ஏக்கங்கள், இந்த தவிர்ப்புகளோடு வெளியில் இருக்கின்ற உறவுகள் இருக்கின்றார்கள். அதேபோன்று உள்ளே இருக்கின்றவர்களும் அதே பாசத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வலிகளை எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை", என முருகையா கோமகன் கூறுகின்றார்.
அரசியல் கைதிகள் மற்றும் உறவினர்கள் அவரவர் மடிகளில் இன்று உறங்கிய சம்பவம் குறுகிய நேர திரைப்படமாக நிறைவடைந்துள்ளதாகவும் முருகையா கோமகன் குறிப்பிடுகின்றார்.
''கிட்டத்தட்ட 67 வயது அம்மா, தமிழ் அரசியல் கைதியாக உள்ளே இருக்கின்றார். அவள் தன்னுடைய மடியில் தன்னுடைய பிள்ளையை வைத்திருந்தாள். அந்த மடியிலேயே அவள் நித்திரையாகிட்டாள். உள்ளே இருந்தவர்கள், தங்களுடைய உறவினர்களின் மடிகளில் படுத்து, உறங்கக்கூடிய அந்த சம்பவம், வலி நிறைந்த குறுகிய நேர திரைப்படமாக அது நிறைவடைந்துவிட்டது" என கண்ணீருடன் முருகையா கோமகன் குறிப்பிட்டார்.
30 வருட யுத்த காலத்தில் சுமார் 27 வருடங்களாக சிறை வாழ்க்கை அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதியொருவரின் சகோதரியான வாகினி, பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.
''நீண்ட நாள் அரசியல் கைதிகள் என்ற வரிசையில் எனது அண்ணன், முதலிடத்தில் இருக்கின்றார். 4 வருடமாக அவரை பார்க்கவில்லை. எந்தவிதமான தொடர்பும் இல்லை. கொரோனா பிரச்னை காரணமாக அவரை சந்திப்பதற்கு கிடைக்கவில்லை. 4 வருடத்திற்கு பிறகு இவரை நேரில் சந்தித்திருக்கிறோம். மூன்று தலைமுறையாக அவரை பார்வையிட வந்துகொண்டிருக்கின்றோம். நான் வந்திருக்கிறேன். எனது மகள், பிள்ளைகளை கூட்டிட்டு வந்திருக்கின்றேன். பேரப் பிள்ளைகளையும் கூட்டி வந்து காட்டும் சூழலில் நாங்கள் இருக்கிறோம். ஆனால் எங்கள் அண்ணனுக்கு விடுதலை இன்னும் கிட்டவில்லை. 27 வருடமாகின்றது. மூன்று மாதத்திற்கு முன்புதான் எங்கள் அம்மா இறந்தார். அதற்கு கூட்டி வந்தார்கள். இப்படி ஒவ்வொருவருடைய இறப்பிற்கு மாத்திரம்தான் எங்களுடைய வீடுகளுக்கு வந்து போகும் சூழல் இருக்கின்றது. நாளைக்கு நாங்களும் இறந்தால்தான் அவர் வீட்டுக்கு வரக்கூடிய சூழல் இருக்கும்" என கண்ணீருடன் வாகினி தெரிவித்தார்.
17 வருடங்களாக அரசியல் கைதியாக சிறைவாசம் அனுபவித்து வரும் தனது தந்தையின் விடுதலை வரை, தனது திருமணத்தை ஒத்திவைத்து வருவதாக அரசியல் கைதி ஒருவரின் மகன் பிரின்ஸ் குறிப்பிடுகின்றார்.
''கிட்டத்தட்ட 9, 10 வயதாக இருக்கும் போது, எனது அப்பா பிடிப்பட்டார். இப்போது எனக்கு 27 வயதாகின்றது. இதுவரை சரியான முடிவில்லை. நாங்கள் அவருடைய விடுதலையை காத்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். எனது திருமணம் நடைபெற இருக்கின்றது. அதற்கும் அவருடைய வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இந்த வருடம் அவர் வர போகின்றார் என சொல்லி 2, 3 தேதி பார்த்து வைத்தோம். ஆனால் அந்த தேதிகளில் அவர் வரவில்லை. அவர் வர வேண்டும் என்பதுதான் எங்களின் முதல் நோக்கம்" என அவர் கூறுகின்றார்.
பல தசாப்தங்களாக அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் தொடர்ந்து சிறைச்சாலைகளில் சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதிகளை, பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கைதிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதியுடன் நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.