அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி கூறுகின்ற போதும், அவர்கள் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றது. இதனால் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது ஏமாற்று வார்த்தைகளாக மாறப்போகின்றனவா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில்வியாழக்கிழமை நடைபெற்ற சமூக பாதுகாப்பு வரி தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“ எங்களுடைய மக்களின் பிரச்சினைகள் ஒவ்வொரு நாளும் மேலோங்கி இருக்கின்றது. ஜனாதிபதி தனது அக்கிராசன உரையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக கூறியிருந்தார். அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவரை சந்தித்த போது, அதில் அக்கறை உள்ளவர் போன்றும் கூறியிருந்தார். ஆனால் இப்போது அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருக்கின்றதாக அறிகின்றோம்.
நீதிமன்றத்தினால் வழக்குகள் தீர்க்கப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நிலை இருந்த போதும், ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்யும் நிலை உள்ள போதும், அவர்கள் மீது புதிய வழக்குகளை பதிவு செய்யும் துர்ப்பாக்கிய நிலைமை இருக்கின்றது. இந்த ஒருவாரத்திற்குள் பலர் மீது புதிய வழக்குகள் போடப்பட்டுள்ளன. தீர்ப்பளிக்கப்பட்ட 10 வருடங்கள், 15 வருடங்களாக அந்த தீர்ப்பை அனுபவித்துக்கொண்டு இருக்கின்ற நேரத்தில் புதிய வழக்குகளை போடுவதை அவதானிக்க முடிகின்றது. அவர்களின் விடுதலை என்பது ஏமாற்று வார்த்தைகளாக மாறப்போகின்றனவா என்ற அச்சம் எங்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி கவனம் செலுத்தி அவர்களை விடுதலை செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். இந்நிலையில் புதிய வழக்குகளை போடுவதன் ஊடாக அவர்கள் சிறைகளுக்குள்ளேயே மரணிக்கும் சூழல் ஏற்படுவதாகவே நாங்கள் கருதுகின்றோம். இதனால் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகேள் விடுகின்றோம்.
இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளுக்காக வடக்கு, கிழக்கில் பலரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைத்துள்ளனர். அதில் தமிழ் பத்திரிகையாளர்களும் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கில் 12 பேருக்கும் மேல் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனனர். இவ்வாறான நிலைமையில் எவ்வாறு சமாதானத்தை உருவாக்க முடியுமாக இருக்கும்.
விசாரணைக்கு அழைக்கப்படுவதற்கான காரணங்கள் கூறப்படவில்லை. வெளிநாட்டில் உள்ளவர்களுடன் தொடர்பு வைத்திருந்தமையும் காரணமாக கூறப்படுகின்றது. இந்த விடயங்கள் இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு எவ்வாறு வழியமைக்கப் போகின்றது.
மீள் உருவாக்கம் என்ற நிலை இப்போது இல்லை. புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிககள் கூட அரசியலுக்கு வரும் சூழல் இருக்கின்றது. இவ்வாறான நிலைமையில் அனைவரையும் அழைத்து விசாரணை என்றால் இனப்பிரச்சினைத் தீர்வுக்கும், நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்பதற்கும் எங்களின் புலம்பெயர்ந்தவர்கள் வருவார்களா என்று கேட்கின்றேன்.
இதேவேளை இந்தியாவில் இருந்து எங்களின் மக்களை அழைத்துவர குழுவொன்றை அமைத்துள்ளனர். இதனை வரவேற்கின்றோம். அவர்கள் பல வருடங்களாக இருந்தவர்கள். இவர்களை விமானத்தில் அழைத்து வரும் போது குறிப்பிட்ட கிலோ அளவுக்கே பொருட்களை கொண்டு வர முடியும். இதனால் அவர்களை கப்பல்களில் அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு காணி, வீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். ஆனால் இதற்கு முன்னர் வந்தவர்களுக்கு அவ்வாறு வழங்கவில்லை.
இதனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்தையும் வழங்கியே கொண்டுவர வேண்டும் என்று கூறுகின்றோம். இந்தியாவில் இருந்து படித்து பட்டதாரிகளாகியவர்களுக்கு இங்கு வந்த பின்னர் முறையான வேலைகள் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். இவற்றை செய்த பின்னரே அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை வடக்கில் நிலங்களை அபகரிக்கும் நிலைமைகள் உள்ளன. இராணுவ முகாம்கள் ஏக்கர் கணக்கில் உள்ளன. இப்போது எதற்கு அந்தளவு இடம். மக்களின் விவசாய காணிகள், உறுதி காணிகள் முகாம்களுக்குள் உள்ளன. அவற்றை விடுக்க வேண்டும். இப்படியிருக்கையில் வடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் சீனாவின் அட்டைப் பண்ணைக்காக வழங்கப்படுகின்றது.
எங்கள் மக்களின் காணிகளா உங்களின் கண்களில் தெரிகின்றது. இவ்வாறு எங்களின் மக்களின் காணிகளை அபகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை நிறுத்த வேண்டும். இராணுவத்தினரை குறைக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் எங்களின் காணிகளை பிடிக்கக் கூடாது என்பதே எங்களின் பிரதான நோக்கமாக உள்ளது என்றார்.