விடுதலைப் புலிகளுக்காக மேற்குலகில் சேகரிக்கப்பட்ட நிதி! டயஸ்போராக்கள் அல்ல: சிறிலங்கா அரசாங்கம் புதிய விளக்கம்
04 Sep,2022
புலம்பெயர் தமிழர்களுக்காக தனி அலுவலகம் அமைக்கப்படவுள்ளது ஆனால் அதை டயஸ்போரா அலுவலகம் என நாம் அழைப்பதில்லை. புலம்பெயர் இலங்கையர் (Overseas Srilankan) என்பது அதன் பெயர் என அதிபரின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
டயஸ்போரா என்ற ஆங்கில வார்த்தை ஒரு நாட்டு குடிமக்கள் மற்றொரு நாட்டில் வாழ்வதைக் குறிக்கிறது எனவும் அவர் கூறினார்.
விடுதலைப் புலிகளின் காலத்தில் புலம்பெயர் அமைப்புகள் மேற்குலகில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டன. அவர்களைக் குறிக்கும் வகையில் டயஸ்போரா என்ற பதம் உபயோகிக்கப்பட்டதால் அது 'கெட்ட' வார்த்தையானது. அதனால் தான் அப்பதத்தை நீக்கினோம்.
நாம் இப்போது புலம்பெயர் அமைப்புகளுடன் பேசி வருகிறோம். எத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை இப்போது சொல்வதற்கில்லை. எதிர்காலத்தில் அது பற்றி வெளிப்படையாக பேசக்கூடியதாக இருக்கும் என நம்புகிறேன் என்று சாகல ரத்நாயக்க மேலும் கூறினார்.
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்காக நாங்கள் தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். சம்பந்தன், சுமந்திரன் ஆகியோருடனும் விக்னேஸ்வரனுடனும் பேசி வருகிறோம்.
எமது கதவு அனைவருக்கும் திறந்திருக்கிறது. ஏனெனில் இது நாட்டை முன்நிறுத்தி யோசிக்க வேண்டிய காலம். தமிழ்க்கட்சிகள் எம்முடன் இணைந்து பணியாற்றுவதில் எம் தரப்பில் எந்தத் தடையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.