மேலும் 8 இலங்கை தமிழர்கள் தமிழகம் வருகை!
22 Aug,2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் குழந்தைகளுடன் பசி பட்டினியுடன் தவித்து வருகின்றனர். இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி பலர் வாழ வழியின்றி, தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். அதன்படி இலங்கையிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு 100-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ளனர்.
இந்நிலையில், இரண்டரை மாத கைக்குழந்தையுடன் இலங்கையில் இருந்து 8 பேர் நேற்று முன்தினம் புறப்பட்டுள்ளனர். இந்தியா- இலங்கை இடையே உள்ள மூன்றாம் மணல் திட்டு பகுதியில், இலங்கை படகோட்டிகள் அவர்களை இறக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். உணவு குடிநீர் இன்றி நேற்று முழுவதும் மணல் திட்டில் அவர்கள் தவித்து வந்துள்ளனர்.
தனுஷ்கோடி அருகே மணல் திட்டில் அகதிகள் தவித்து வருவதாக கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு சென்ற கடலோர காவல் படையினர், 4 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 8 பேரை கப்பல் மூலம் மண்டபம் பகுதிக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் போலீசார் மற்றும் உளவு பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.