சீனாவின் உளவு கப்பலை கண்காணிக்க அமெரிக்க அரசு உயர் தொழில்நுட்ப கருவிகளை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன உளவு கப்பல் வந்துள்ள நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பிற்கு கடும் அச்சம் நிலவுவதாக இந்தியா கவலை வெளியிட்டது.
சீனாவின் உளவு கப்பல் அதி நவீன தொழில்நுட்பங்கள் கொண்டதால் தான் இருக்கும் இடத்தில் இருந்து 750 கி.மீ வரை துல்லியமாக ஆய்வு செய்யும் திறன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது,
இந்தியாவின் அணுமின்நிலையம் உட்பட செய்மதி ஏவுதளமான ஸ்ரீ ஹரிகோட்டா வரை பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டது.
இதன் காரணமாக, சிறிலங்காவில் கப்பல் நிற்கும் காலப்பகுதில் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது என்பது குறித்து கண்காணிக்க உயர் தொழில்நுட்ப கருவிகளை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.
இந்த சாதனங்கள் என்ன என்பதை அமெரிக்கா வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக இரண்டு அமெரிக்க இராணுவ செயற்கைகோள்களை ஹம்பாந்தோட்டை வான்பரப்பிற்கு அனுப்பும் பணியை அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, சீனக் கப்பலின் விவகாரங்கள் குறித்து கண்காணிக்க இந்திய பெருங்கடலில் இந்தியாவின் தொழில்நுட்ப கப்பலான வீ.சி 11184 என்ற கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன கப்பல் யுவான் வாங் 5 நங்கூரமிட்டுள்ள நிலையில், இந்தியாவின் இராமேஸ்வரம் கடலில் இந்திய கடற்படையினர் உலங்கு வானுர்திகள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கடற்படைக்கு சொந்தமான உலங்கு வானுர்திகள் இராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் தாழ்வாக பறந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்ட குறித்த கப்பல் மூலம் தென் இந்தியாவில் உள்ள 6 கடற்படை தளங்களை இந்த உளவு கப்பலால் படம் பிடிக்க முடியும் எனவும் அங்கு என்ன வசதிகள் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தமிழகத்தில் கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய 2 இடத்திலும் சக்திவாய்ந்த அணுமின் நிலையங்கள் உள்ளன.
இந்த அணுமின் நிலையங்களையும் உளவு கப்பலால் பார்க்க முடியும் எனவும் சென்னைக்கு அருகே இருக்கும் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பணிகளையும் அந்த கப்பலால் ஆய்வு செய்ய முடியும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தல்கள் தவிர விசாகப்பட்டினம் மற்றும் கொச்சியில் உள்ள கடற்படை தளங்களையும் கப்பல் துல்லியமாக தெரிந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் இந்த உளவு தகவல்கள் உடனுக்குடன் சீன இராணுவத்துக்கு அனுப்பப்படும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கப்பலின் வருகையை தவிர்க்க முடியாமல் உள்ளது என சிறிலங்கா அரசு தெரிவித்திருந்தாலும் இன்று கப்பலுக்கு சீன தூதரகமும், சிறிலங்கா அதிகாரிகளும் உற்சாக வரவேற்பு கொடுத்தமை அமெரிக்க இந்திய தரப்பின் அச்சத்தை மேலும் வலுவாக்கியுள்ளது.
இதன் காரணமாக கப்பல் துறைமுகத்தில் இருக்கும் 7 நாட்களும் அந்த கப்பலின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க இந்தியா ஏற்பாடு செய்திருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.