இந்தியாவை கோபமூட்டும் காரியம்! சீனாவால் இலங்கைக்கு புதிய தலையிடி
29 Jul,2022
ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீனாவின் விஞ்ஞான ஆய்வு கப்பலான யுவான் வாங் 5 வருவது தொடர்பில் இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் நிதின் ஏ. கோகலே வெளியிட்டுள்ளார்.
இக்குறித்த கப்பலின் ஹம்பாந்தோட்டை விஜயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள அவர், 2014 ஆம் ஆண்டு கொழும்பில் சீன நீர்மூழ்கிக் கப்பலையும் போர்க்கப்பலையும் நிறுத்த அனுமதித்த இலங்கையின் முடிவை வலியுறுத்தியுள்ளார். அது, அந்த நேரத்தில் இந்தியாவை கோபப்படுத்தியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் 12ஆம் திகதியன்று இந்த கப்பல் சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு முன்னேற்றத்தையும் அரசாங்கம் கவனமாகக் கண்காணித்து அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி நேற்று ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.
இது ஒரு தெளிவான செய்தியாக இருக்கும் என்று தாம் நினைப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் இந்தியா என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது, யாருக்கு இந்த தெளிவான செய்தி அனுப்பப்பட்டது என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இந்தியாவின் இந்தக் கருத்துக்கு சீனாவின் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.
அத்துடன் இலங்கை அதிகாரிகளையும் உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ரொயட்டர் தெரிவித்துள்ளது.
இதேவேளை கொழும்பில் உள்ள இந்திய இராஜதந்திரிகள் கடந்த திங்கட்கிழமை இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் இதற்கு தமது வாய்மொழியாக எதிர்ப்புத் தெரிவித்ததாக இலங்கை அரசாங்க அதிகாரி ஒருவரை கோடிட்டு ரொயட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கப்பல் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்குப் பகுதியில் ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் விண்வெளி கண்காணிப்பு, செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பு ஆகியவற்றை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது