அடித்து விரடப்பட்ட போராட்டக்காரர்கள்
22 Jul,2022
இன்று அதிகாலை ஒரு மணியளவில் சிறிலங்கா அதிபர் செயலகத்தை முற்றுகையிட்ட முப்படையினர் கோட்டா கோ கம போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் சிறிலங்கா அதிபர் செயலகம் மற்றும் அதன் நுழைவு வாயிலை இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
முப்படையினர், காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசேட அதிரடிப்படையினர் இன்று அதிகாலை 1.30க்கும் 2.30க்கும் இடையில் சிறிலங்கா அதிபர் செயலக வளாகத்திற்குள் நுழைந்து சிறிலங்கா அதிபர் செயலகத்திற்குள் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றினர்.
ஆர்ப்பாட்ட பகுதிக்குள் பாதுகாப்பு படையினர் நுழையும் போதே, “இராணுவத்தினருடன் யாரும் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம். அவ்வாறு செயற்பட்டால் அவசர கால சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள். போராட்ட களத்திற்கு சென்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுங்கள்” என காவல்துறையினர் எச்சரிக்கை ஒன்றும் வெளியிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
ஸ்ரீலங்காவின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்றையதினம் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் வைத்து தான் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் என நேற்று ரணில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இராணுவத்தினர் அதற்கான ஏற்பாடுகளை இரவோடு இரவாக செய்து முடிந்துள்ளனர் என கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.