ஜனாதிபதி போட்டியில் இருந்து சஜித் விலகல் – ஐக்கிய மக்கள் சக்தி டலஸுக்கு ஆதரவு!
19 Jul,2022
ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து தான் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
சஜித்தின் தியாகத்தை பாராட்டினார் டலஸ்!
ஜனாதிபதி போட்டியிலிருந்து சஜித் பிரேமதாஸ வெளியேறி, மாபெரும் தியாகத்தை செய்துள்ளார் என ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விசேட காணொளி வாயிலாக கருத்து வெளியிட்டுள்ள அவர், இன்று இந்த நாட்டுக்கு ஐக்கியமான ஒரு அரசியல் கலாசாரம் தேவைப்படுகிறது.
மக்களும் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களின் குரல் புரியாமல் இருந்தது.
நேற்று வரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதாகவே தீர்மானித்திருந்தார்.
இன்று அவர் மாபெரும் தியாகத்தை செய்துள்ளார். ஒரு கட்சியினாலோ ஒரு தலைவரினாலோ இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண முடியாது.
மக்களை பிரச்சினைகளில் இருந்து வெளியே கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.- என்றார்.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் குழு, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு என தெரிவித்து சஜித் பிரேமதாச போட்டியில் இருந்து விலகியிருந்தார்.
இதேவேளை டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்க தாம் ஆதரவு என கி.எல்.பீரிஸ் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.