வெளியேற தீர்மானம்
சிறிலங்கா அதிபர் மாளிகை, சிறிலங்கா அதிபர் செயலகம், அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்திலிருந்து உடனடியாக வெளியேற காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் ஊடவியலாளர் சந்திப்பு ஒன்றை சற்று முன்னர் நடத்திய நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
"இது ஒரு சமாதானமான போராட்டமாக காணப்பட வேண்டும். வன்முறை எங்கள் நோக்கமல்ல. எனினும் கோட்டாபய மற்றும் ரணிலை விரட்டும் வரை எங்கள் போராட்டம் முடிவுக்கு வராதென" ஆர்ப்பாட்ட ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், போராட்டம் வேறு வகையில் திசை திரும்புவதனை தவிர்க்க வேண்டும் என ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று நாடாளுமன்றம் மற்றும் சபாநாயகர் இல்லத்தை சுற்றிவளைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள நிலையில் அங்கு சென்ற ஒரு குழுவினரால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இனினும் இவ்வாறு தொடர்ந்தால் நாட்டின் நிலைமை மிகவும் பயங்கரமானதாக மாறிவிடும்.
எனவே தாங்கள் சிறிலங்கா அதிபர் செயலகம், சிறிலங்கா அதிபர் மாளிகை, அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டுள்ளனர்
- சமுக ஊடகங்கள் முடக்கப்படலாம்; இரகசிய பேச்சுவார்த்தைகள்
சிறிலங்காவின் புதிய பிரதமராக டலஸ் அழகபெரும, சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, தினேஷ் குணவர்தன ஆகியோரில் ஒருவரை நியமிக்க இரகசிய பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரிலில் இருந்து இன்று தனது பதவி விலகலை அறிவித்தால், இன்றிரவு பிரதம நீதியரசர் முன்னிலையில் அதிபரா பதவியேற்க ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலைமையில் குழப்பங்கள் வரலாம் என கருதியே கொழும்பில் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தேவைப்படின் இந்த ஊரடங்கு நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையில், அதிபராக பதவியேற்றதும் அவசர காலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதோடு, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டப்போவதாக ரணில் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, சமூக ஊடகங்கள் சில மணி நேரங்களுக்கு முடக்கப்படும் வாய்ப்பும் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வகட்சி அரசாங்கத்தில் அதிபர் - சஜித், பிரதமர் - அநுர : பெயர்கள் பரிந்துரை
சர்வகட்சி அரசாங்கத்தில் புதிய அதிபராக சஜித் பிறேமதாசவும், பிரதமராக அநுர குமார திஸநாயக்கவும் நியமிக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம்இ அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் விசேட அதியுயர் பீட கூட்டம் கல்முனையில் உள்ள தலைமை செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இதைத் தொடர்ந்து மாலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இன்று இலங்கை வரலாற்றில் மிக மிக பொன்னான நாள். மக்கள் போராட்டம் வெற்றி பெற்ற மகத்தான தினம். இம்மகிழ்ச்சியில் நாமும் பங்கேற்கின்றோம்.
மக்கள் போராட்டத்தின் மூலம் சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ விரட்டி அடிக்கப்பட்டுள்ளார். புதிய அதிபர், புதிய பிரதமர் ஆகியோர் நியமிக்கப்படுதல் வேண்டும்.
நாம் அடையாளம் கண்ட வகையில் சஜித் பிறேமதாச, அனுரகுமார திஸநாயக்க ஆகிய இருவரும் இந்நாட்டை தலைமை ஏற்று நடத்துவதற்கு மிக மிக பொருத்தமானவர்கள். சஜித் அதிபராகவும், அனுர பிரதமராகவும் நியமிக்கப்பட வேண்டும் என்று நாம் முன்மொழிகின்றோம்.
இந்த அரசாங்கத்தை தீர்மானிக்கின்ற சக்திகளாக போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் இருந்து இயங்குதல் வேண்டும். அதே போல் வடகிழக்கிலும் இவ்வாறான மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
வடகிழக்கு மக்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகின்ற குறுகிய, சுய இலாப தலைமைகளை விரட்டி அடிக்க வேண்டும். விக்னேஸ்வரனும் ஒன்றுதான், சம்பந்தரும் ஒன்றுதான். எமது மக்கள் புதிய தலைமையின் கீழ் பயணிக்க வேண்டும்” என்றார்.