மாலத்தீவில் தஞ்சம் அடைந்த ராஜபக்சே சிங்கப்பூர் செல்கிறாரா?
14 Jul,2022
கோத்தபய ராஜபட்ச வெளியேறக் கோரி இலங்கை மற்றும் மாலத்தீவு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், கோத்தபய மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இன்றைய இலங்கையில் நிலைக்கு, அதிகாரத்தில் இருந்த ராஜபக்ச குடும்பம் தாம் முக்கிய காரணம் என மக்கள் கொதித்து எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகையையும், பிரதமர் இல்லத்தையும் சூரையாடியதைத் தொடர்ந்து, கோத்தபய ராஜபக்ச சிறிது நாட்கள் தலைமறைவாக இருந்தார்.
பரவலான எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று அதிபர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிரபார்க்கப்பட்ட நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ, தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை அதிகாலை நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.
அதே நேரத்தில் மாலத்தீவில் தஞ்சம் அடைந்து இருக்கும் கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்தும், வெளியேற வலியுறுத்தியும் பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில், மாலத் தீவு சரிப்படாது என மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இலங்கை தலைநகர் தற்போது போராட்டக்களமாக மாறி உள்ளது. கொழும்பு மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த தாக்கம் ஏற்பட்டுள்ளது. இது அரசியல் எதிர்ப்புக் களமாக இல்லாமல், மக்களின் போராட்டக்களமாக, மக்களுக்கான களமாக மாறியுள்ளது. போராட்டக்காரர்களை அடக்குவதற்கு அனைத்துப் படைகளும் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. போராட்டக்காரர்களை கைது செய்வதற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இலங்கையின் அதிகாரபூர்வ இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை தேர்வு செய்து நாடாளுமன்ற சபாநாயகர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரும் 15ஆம் தேதி நாடாளுமன்ற கூடுகிறது. இதைத் தொடர்ந்து 20ஆம் தேதி கூடும் எம்பிகள் கூட்டத்தில் புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் பொது வெளியில் காணப்படாத கோத்தபய ராஜபக்ச, ஐக்கிய அரசாங்கத்திற்கு வழி வகுக்கும் வகையில் புதன்கிழமை ஜனாதிபதி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அவரது மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லங்களை முற்றுகையிட்டதை அடுத்து, ராஜினாமா செய்யும் முடிவை எடுத்தார்.
கோத்தபய ராஜபக்சே இன்று ராஜினாமா செய்வதற்கு ஒப்புக் கொண்டு இருந்த நிலையில் மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில்தான் இன்று கொழும்புவில் போராட்டம் உக்ரமடைந்துள்ளது.