ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டிலேயே உள்ளார் இன்று காலை முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார் என தெரியவருவதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
9ம் திகதி ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இலங்கையின் கடற்பரப்பிற்குள் கடற்படை கலத்தில் தங்கியிருந்த ஜனாதிபதி இன்றுநாடு திரும்பியுள்ளார் முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார்.
13ம் திகதி பதவியை இராஜினாமா செய்யவுள்ள ஜனாதிபதி பின்னர் வெளிநாட்டிற்கு செல்லவுள்ளார்.
ஜனாதிபதி 13 ஆம் திகதி பதவி விலகினால் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு – பிரசன்ன ரணதுங்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகினால், எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் ஜனாதிபதி ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகினால் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெறுமெனவும் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், பாராளுமன்றம் ஜூலை 15 ஆம் திகதி கூடவுள்ளதாகவும், ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஜூலை 20 ஆம் திகதி ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
ஹக்கீமினாலேயே எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது : ரணில் காட்டம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினாலேயே எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
“நீங்கள் பதிவிட்ட டுவிட்டரே எனது வீடு தீக்கிரையாகக் காரணம்” இன்று (11) திங்கட்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ரவூப் ஹக்கீமை கடுமையாகச் சாடியுள்ளார்.
இதனையடுத்து கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பெரும் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஆற்றிய உரையின் போதும் இதனை குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, சர்வகட்சி ஆட்சியொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கவே வந்தேன் – பிரதமர்
பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கிலேயே பிரதமர் பதவியை பொறுப்பெடுத்தேன். ஆனால் இன்று எனது இல்லம் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது. எனது பெரும் சொத்தான 2,500க்கும் அதிகமான நூல்களும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனியார் ஊடகமொன்றின் செயற்பாடுகளினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததன் காரணமாகவே நான் பிரதமர் பதவியை ஏற்றேன். உண்மையில் அது பொருளாதாரத்தைக் கொண்டு செல்ல முடியாதவொரு சந்தர்ப்பமாகும். மக்கள் துன்பமடைந்தனர். பெரும்பாலானவர்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்திருந்தனர். அதேபோன்று எரிபொருள், அந்நிய செலாவணி என எவையுமே இல்லாமலிருந்தன. இதற்கு முன்னர் நான் இவ்வாறானதொரு துன்பத்தைப் பார்த்ததில்லை. எனவே தான் நான் இந்த பிரதமர் பதவியை ஏற்றேன்.
அதே போன்று பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தேன். ஆனால் அதனை ஓரிரு நாட்களில் செய்ய முடியாது. அடிப்படை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு வருடமேனும் செல்லும். குறிப்பாக நான்கு ஆண்டு காலம் செல்லும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அவற்றில் முதலாம் வருடமே கடினமானதாகும். நான் பிரதமராக பதவியேற்ற சந்தர்ப்பத்திலும் இந்த பிரச்சினை காணப்பட்டது. எரிபொருள் வரிசைகள் அதிகரித்தன.
எமக்கு பாரிய பிரச்சினைகள் உள்ளன. அவற்றை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த சில மாதங்களில் பிரச்ச்சினைகள் மேலும் தீவிரமடையும். மக்கள் அனுபவிக்கும் துன்பத்தை நான் அறிவேன். அதற்காக நான் மன்னிப்பும் கோரியிருக்கின்றேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். 9 ஆம் திகதி சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது , எனக்கிருந்த சந்திப்புகள் அனைத்தையும் ஒத்திவைத்து விட்டு வீட்டிலேயே இருந்தேன்.
இதன் போது மாலை வேளையில் , ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வெளியேறுபவர்கள் எனது வீட்டின் முன் வந்து கூச்சலிடக் கூடும் என்பதால் , அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டது. எனவே நானும் எனது பாரியாரும் வீட்டிலிருந்து வெளியேறினோம். இதன் போதே வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. எனக்கு இருப்பது ஒரேயொரு இல்லமாகும். இந்த ஒரேயொரு இல்லமும் இன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
எனது பெறுமதி மிக்க சொத்தாக என்னுடைய நூலகமே காணப்பட்டது. அதில் 2,500 நூல்கள் காணப்பட்டன. போர்த்துக்கேயர் காலத்தில் எழுத்தப்பட்ட நூல் ஒன்றும் , சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஒல்லாந்து காலம் தொடர்பில் எழுத்தப்பட்ட நூல், பிரபலமான பலர் கையெழுத்திட்ட நூல்கள் காணப்பட்டன. இந்த நூல்களை எமக்கு பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் , பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் வழங்குவதற்கு நானும் எனது பாரியாரும் தீர்மானித்திருந்தோம்.
அது மாத்திரமின்றி சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் காணப்பட்டன. அவற்றில் ஒன்று மாத்திரமே எஞ்சியுள்ளது. ஏனைய அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இல்லத்தை அழிப்பதானது ஹிட்லர் மனநிலையிலுள்ள மக்களாளேயே முடியும். இதற்கு பின்னணியொன்று உள்ளது. சம்பவ தினத்தன்று மாலை 4 மணிக்கு கட்சி தலைவர் கூட்டம் இடம்பெற்றது. நான் மெய்ந்நிகர் ஊடாக அதில் பங்குபற்றியிருந்தேன். இதன் போது எதிர்கால திட்டங்கள் குறித்து பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பது தொடர்பில் அனைவரதும் இணக்கப்பாடு காணப்பட்டது. புதிய வேலைத்திட்டத்தின் கீழ் புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதன் போது ஜனாதிபதி , பிரதமர் இருவருமே பதவி விலகி சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்;சி வலியுறுத்தியது. இதற்கு காலம் செல்லும் என்பதால் நான் இணக்கம் தெரிவிக்கவில்லை.
எனினும் எதிர்க்கட்சியினர் முன்வைத்த யோசனைக்கமைய சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுப்பதற்காக நான் பதவி விலகத் தயாராக உள்ளதாக அறிவித்தேன். இது தொடர்பில் விவாதங்கள் தொடர்ந்த போதிலும் , இதுவே எனது நிலைப்பாடு எனத் தெரிவித்தேன். காரணம் இவ்வாரம் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை , உணவு பொருட்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் எரிபொருளைப் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட முக்கிய வேலைத்திட்டங்கள் உள்ளன.
இதற்கிடையில் நான் பதவியிலிருந்து விலகுவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்று ரவுப் ஹக்கீம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நான் பதவி விலக விருப்பம் இல்லை என்று கூறவில்லை.
சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரே பதவி விலகுவேன் என்றே தெரிவித்திருந்தேன். இது குறித்து சுமந்திரன் என்னிடம் வினாவினார். அவருக்கும் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரே பதவி விலகுவேன் என்பதை குறிப்பிட்டேன். தான் டுவிட்டரில் பதிவிடவில்லை என்று குறிப்பிட்டார்.
குறித்த டுவிட்டர் பதிவை பிரபல தனியார் ஊடகமொன்று உள்ளிட்ட பல ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. அந்த செய்தியை முன்னர் குறிப்பிட்ட பிரபல தனியார் ஊடகம் திரிபுபடுத்தி வெளியிட்டது. அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் , அவ்வாறு செய்தால் எமது இல்லத்திற்கு தீ வைப்பார்கள் என்றும் குறித்த ஊடக பிரதானியிடம் 3 சந்தர்ப்பங்களில் தெரிவித்தேன். எனினும் அவர்கள் அதனை கவனத்தில் கொள்ள வில்லை.
இதன் போது எனது இல்ல வளாகத்தில் ஒன்று கூடிய தரப்பினர் மீது இரு சந்தர்ப்பங்களில் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட போது குறித்த தனியார் ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் பாதுகாப்புதரப்பினரால் தாக்கப்பட்டனர் என்று கூறப்பட்டது. அதற்கு நாம் கவலையையும் வெளிப்படுத்தியிருந்தோம். ஆனால் இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகினால் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கலாம்.
ஆனால் அவர்கள் அதனை விடுத்து அனைவருக்கும் குறித்த பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததோடு , வரக்கூடிய வழியையும் காண்பித்தனர். அதன் பின்னர் , ‘இங்கு வாருங்கள். பொலிஸாரால் தடுக்க முடியாது. நாம் சட்ட ஆலோசனையைப் பெற்றிருக்கின்றோம்.’ என்று கூறினர். அதன் பின்னர் அந்த குழுக்கள் வந்ததையடுத்து தடியடியும் கண்ணீர்ப்புகை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக இந்த வழி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்வதாகும். எனினும் நாம் அதனை செய்யவில்லை. எனது இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டது.
எனது இல்லத்தில் மாத்திரமின்றி ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை உள்ளிட்ட அனைத்திற்குள்ளும் நுழைந்து ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் சட்டத்திற்கேற்ப செயற்பட வேண்டும். நாம் அரசியலமைப்பிற்கேற்ப செயற்பட வேண்டும். அரசியலமைப்பிற்கு அப்பால் நாம் செயற்படப் போவதில்லை. பாராளுமன்றத்திற்கும் அழுத்த பிரயோகிக்க முடியாது.
அரசியலமைப்பினைப் பாதுகாப்பதற்காகவே நான் இங்கு இருக்கின்றேன். அரசியலமைப்பினைப் பாதுகாத்து அரசியலமைப்பிற்கமைய மக்களின் குரலை செவிமடுக்க வேண்டும். தற்போது எமது தேவை சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதாகும் என்றார்.