சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வௌிநாடுகளுக்கு செல்ல முயற்சித்த 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை – நிலாவௌி கடற்பகுதியூடாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 45 பேர் இன்று(06) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
மூதூர் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 45 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 18 வயதுக்கும் குறைந்த 25 பேரும் 09 பெண்களும் 11 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்.வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவத்துடன் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இன்று(06) அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, வவுனியா மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த 04 பேரே வல்வெட்டித்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை வௌிநாட்டிற்கு அனுப்புவதற்காக பணம் பெற்றுக்கொண்டவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் கூறினர்.
இதனிடையே, சட்டவிரோதமாக இந்தியாவிற்கு செல்ல முயற்சித்த 09 பேர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாழ்வுப்பாடு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் இவர்கள் நேற்றிரவு(05) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இவர்களில் 18 முதல் 48 வயதுக்கு இடைப்பட்ட 05 ஆண்களும் 29 வயதான பெண்ணொருவரும் 05 மற்றும் 08 வயதான இரண்டு சிறுவர்களும் 06 வயது சிறுமியொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார், வவுனியா மற்றும் வெலிமடை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.