இலங்கை: “தமிழக நிவாரணப் பொருட்களை நேர்மையாக வழங்குங்கள்” வாகனப் போக்குவரத்துச் செலவுக்காக சாதாரண மக்களிடம் தலா 50 ரூபா வீதம் வசூலிப்பு!
05 Jul,2022
தமிழக அரசாங்கத்தால் கிடைக்கப்பெற்ற நிவாரணப் பொருட்கள் எந்த விதமான பாரபட்சமுமின்றி அனைத்து மக்களுக்கும் நேர்மையான முறையில் வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளதாக இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், “முதலாவது தொகுதி நிவாரணப் பொருட்கள் கடந்த மாதம் வந்தடைந்த நேரத்தில், மலையக மக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
இப்போது வந்துள்ள இரண்டாவது தொகுதியில் வந்துள்ள நிவாரணப் பொருட்களை அத்தகைய குறைபாடுகள் எதுவுமின்றி சரியான முறையில் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதோடு, தமிழக அரசியின் நிவாரணப் பொருட்களை வழங்கும் போது, பதுளை மாவட்டத்தில் உள்ள சில பிரதேசங்களில் வாகனப் போக்குவரத்துச் செலவுக்காக சாதாரண மக்களிடம் தலா 50 ரூபா வீதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகிருந்தன. இது வேதனைக்குரிய விடயம் ஆகும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “சாதாரண மக்களின் ஏழ்மை நிலையை அறிந்து நிவாரணம் வழங்குவதற்காக இலவசமாக வழங்கப்பட்டுள்ள பொருட்களுக்கு “வாகனச் செலவு” என்று கூறி பணம் அறவிட்டுள்ளமை கண்டிக்கத்தக்க விடயம் ஆகும். இவ்வாறு செயற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், ஒரு சிலரின் சமூக விரோத செயல்கள் ஊடாக மலையகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதோடு, தமிழக அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விடும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே, இலவசமாக வழங்கபப்டும் பொருட்களை இலவசமாகவே விநியோகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சிலரின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகள் மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் கிடைக்காமல் போகக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டால் அது எமது சமூத்துக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.