இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில் தமிழ்நாட்டுக்கு அடைக்கலம் தேடி கணவருடன் வந்து தனுஷ்கோடி கடற்கரையில் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பரமேஸ்வரி என்ற பாட்டி ஜூலை 2ஆம் தேதி இரவு காலமானார்.
இந்திய கடலோர காவல் படையால் மீட்கப்பட்ட இருவரும் தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த தம்பதியில் பரமேஸ்வரி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கோதண்டராமர் வடக்கு கடற்கரையில் ஜூன் 27ஆம் தேதி காலை இலங்கையைச் சேர்ந்த இரு முதியவர்கள் மயங்கிய நிலையில் கிடப்பதாக ராமேஸ்வரம் கடலோர காவல் குழும போலீசாருக்கு (மரைன் போலீஸ்) மீனவர்கள் தகவல் அளித்தனர்.
முதியவர்களை மீட்ட கடலோர காவல்படை
இதையடுத்து ராமேஸ்வரம் கடலோர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இருவரும் மயங்கிய நிலையில் இருந்ததால் ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இருவரும் கடற்கரையில் மயங்கி கிடந்ததால் ஆம்புலன்ஸ் வாகனத்தால் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று முதியவர்கள் இருவரையும் மீட்க முடியவில்லை. உடனடியாக மரைன் போலீசார் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மண்டபம் கடலோர காவல் படை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் உதவி கோரினர்.
பரமேஸ்வரியை மீட்கும் கடலோர காவல்படை
மண்டபம் கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் முதியவர்கள் இருவரையும் மயங்கிய நிலையில் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் இலங்கை மூதாட்டிக்கு சுயநினைவு வராததால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருடைய கணவருக்கு சிகிச்சைக்கு பின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இலங்கையில் வாழ வழி இல்லை
முதியவரிடம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர்கள் இலங்கை மன்னார் மாவட்டம் முருங்கன்பிட்டி பகுதியை சேர்ந்த சிவன் (82) அவரது மனைவி பரமேஸ்வரி (70) என தெரிய வந்தது.
இவர்கள் இருவரும் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் பரமேஸ்வரிக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருப்பதால் தினசரி மருந்து எடுத்து கொள்ள வேண்டும்.
ஆனால் அந்த மருந்துகளுக்கு இலங்கையில் தற்போது தட்டுப்பாடு உள்ளதால் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தமிழகத்துக்கு அகதிகளாக வந்து உள்ளனர்.
காணொளிக் குறிப்பு,
இலங்கை வயோதிக தம்பதியின் கண்ணீர் கதை – தனுஷ்கோடி கரையில் உணவின்றி தவிப்பு
இருவரையும் படகில் அழைத்து வந்தவர்கள் கடற்கரை ஓரம் கடலில் தள்ளி விட்டு சென்றதாகவும் விசாரணையில் சிவன் தெரிவித்தார்.
மேலும் திருச்சி வாழவந்தான் கோட்டை அகதிகள் முகாமில் மகன் ராஜா மற்றும் மகள் உதயராணி இருவரும் குடும்பத்துடன் தங்கி இருப்பதால் அவர்களை சந்தித்து அவர்களுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் பரமேஸ்வரிக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலையில் ஸ்கேன் செய்த போது மூளையில் கட்டி இருப்பதும் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் உடனடியாக பரமேஸ்வரியை மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பரமேஸ்வரிக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் சனிக்கிழமை இரவு சுமார் 9 மணி அளவில் பரமேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் பிபிசி தமிழிடம் பேசுகையில், ‘தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வரும் இலங்கை தமிழர்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் முழு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த திங்கட்கிழமை காலை இலங்கையை சேர்ந்த இருவர் மயங்கிய நிலையில் கோதண்டராமர் கடற்கரையில் தஞ்சம் அடைந்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து உடனடியாக கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருவரையும் மீட்டு அவர்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பரமேஸ்வரி
தொடர்ந்து பரமேஸ்வரி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பரமேஸ்வரிக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்தார்.
பரமேஸ்வரியின் மகன் மற்றும் மகள் இருவரும் குடும்பத்துடன் வாழவந்தான் கோட்டை இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். உடனடியாக அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் மதுரைக்கு வந்து உயிரிழந்த பரமேஸ்வரியின் உடலை பெற்றுக்கொண்டனர்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் வழிகாட்டுதலின் படி பரமேஸ்வரியின் இறுதி சடங்கு அவரது உறவினர்களால் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு உரிய உதவிகளை சிறப்பு கவனம் செலுத்தி மாவட்ட நிர்வாகம் செய்து வருவதாக’ மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் தெரிவித்தார்.
படகில் வரும் போது தலையில் ஏற்பட்ட காயம்
உயிரிழந்த பரமேஸ்வரியின் மகள் உதயராணி பிபிசி தமிழிடம் பேசுகையில், இலங்கையில் நடந்த யுத்தத்தின் போது 1990 ஆம் ஆண்டு அகதிகளாக நானும் என் கணவரும் இந்தியா வந்து திருச்சி வாழவந்தான் கோட்டை அகதிகள் முகாமில் தங்கி உள்ளோம்.
எனது பெற்றோர் மன்னார் மாவட்டத்தில் வசித்து வந்தனர். என் அம்மா பலகாரம் சுட்டு கொடுக்க என் அப்பா அதனை விற்பனை செய்து வாழ்ந்து வந்தனர்.
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமையால் பலகாரம் விற்பனை செய்ய முடியாமல் வாழ வழியின்றி தங்களிடம் இருந்த நகையை விற்று படகுக்கு பணம் கொடுத்து என் அம்மா, அப்பா இருவரும் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வருவதாக எங்களுக்கு முன்கூட்டியே தகவல் ஏதும் கொடுக்கவில்லை.
செய்தி வாயிலாக எனது அம்மா, அப்பா இருவரும் தனுஷ்கோடி வந்ததாக தெரிய வந்தது. உடனடியாக ராமேஸ்வரம் சென்று பார்த்த போது இருவரையும் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி விட்டனர்.
எனது அம்மாவுக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோய் மட்டுமே இருந்தது மூளையில் கட்டியோ அல்லது தலையில் பிரச்சனை ஒன்றும் இல்லை.
படகில் அழைத்து வந்தவர்கள் அவர்கள் இருவரையும் படகுக்குள் மறைந்து உட்காரும்படி சொல்லியுள்ளனர். பல மணி நேர ஆபத்தான பயணத்தின் போது கடல் அலை காரணமாக படகில் முட்டி தலைக்குள் காயம் ஏற்பட்டுள்ளது.
எனது அம்மாவின் உடல் உடற்கூறு ஆய்விற்கு பின் என்னிடம் அரசு சார்பில் ஒப்படைக்கப்பட்டது. அம்மாவின் உடலை திருச்சி வாழவந்தான் கோட்டை அகதிகள் முகாமில் தங்கியுள்ள எங்கள் உறவினர்கள் அஞ்சலிக்கு பின் இறுதி சடங்கு செய்ய உள்ளேன் என்றார் உதயராணி.
அம்மா இறந்தது தெரிந்தால் அப்பா தாங்க மாட்டார்
உயிரிழந்த பரமேஸ்வரியின் மகன் ராஜா பேசுகையில், ‘மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என் அம்மாவிற்கு மருத்துவர்கள் உரிய முறையில் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.
உடற்கூராய்வில் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனது அம்மா இறந்த செய்தி இதுவரை என் அப்பாவுக்குத் தெரியாது. அப்பா உடல் நிலை இப்போது தான் மெல்ல மெல்ல தேறி வருகிறது.
அம்மா இறந்த செய்தியை அறிந்தால் அப்பாவால் தாங்க முடியாது எனவே இதுவரை அம்மா இறந்தது குறித்து அவரிடம் தெரிவிக்கவில்லை. உடல்நிலை சரியாகிய பின் அவரிடம் அம்மாவின் இறப்பு குறித்து சொல்லலாம் என முடிவு செய்துள்ளோம்,’ என்கிறார் ராஜா.