வன்முறைகள் தீவிரமடையும் ஆபத்து!
19 Jun,2022
தற்போதைய பொருளாதார நெருக்கடிகளும், மேலும் மோசமடைந்தால் வன்முறைகள் தீவிரமடையும் ஆபத்துள்ளது. பொதுமக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்ப்பதோடு, நிலைமைகளை சீர்செய்வதற்கு உடன் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்க முடியாத அளவிற்கு நிலைமைகள் மோசமடைந்துள்ளன.
இவ்வாறன நிலையில் பொதுமக்கள் ஆட்சியாளர்களை நோக்கி தன்னெழுச்சியாக ஒன்று கூடி கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ஆனால் அதற்கு ஆட்சியாளர்கள் செவிசாய்ப்பதாக இல்லை.
அதேநேரம், பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளும் வழங்கப்படவில்லை. நாளுக்கு நாள் நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றன.
பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அப்பால் அரசியல் ஸ்திரமற்ற தன்மையும் வெகுவாக தோற்றம் பெற்றுள்ளது. இவ்வாறான நிலைமைகளை சீர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடன் ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
அதனை விடுத்து பாராமுகமாக இருப்பார்களாக இருந்தால் நிலைமைகள் மேலும் மோசமடையும். அவ்வாறு நிலைமைகள் மோசமடைந்தால் நாட்டில் வன்முறைகள் தீவிரமடையும் ஆபத்துக்கள் உள்ளன. அவ்விதமானதொரு சூழல் ஏற்பட்டால் நாடு மீண்டெழமுடியாதவொரு நிலைமையே ஏற்படும்.
முன்னதாக பெரும்பான்மைத் தலைவர்கள் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் வழங்குவதற்கு முன்வந்திருக்கவில்லை. இதன் காரணமாகவே ஏழு தசாப்பதங்கள் கடந்தும் அந்தப் பிரச்சினை தீராப்பிரச்சினயாக மாறியுள்ளது. அதில் குறிப்பாக மூன்று தசாப்தங்களாக போர் நீடித்திருந்தது.
தமிழர்களின் அபிலாஷைகளை ஏற்றுக்கொண்டு உரிய தீர்வினை வழங்கியிருந்தால் நாடு தற்போது முகங்கொடுக்கும் நெருக்களை தவிர்த்திருக்க முடியும். இதனை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வது அவசியம்.
தற்போதைய நிலையிலும் கூட, தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவது தொடர்பில் போதிய கரிசனைகளை கொண்டிருப்பதாக தெரியவில்லை. ஆகவே, கடந்தகால வரலாற்றுப் படிப்பினைகள் மூலமாக புரிதல்களைப் பெற்று தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு உரிய தீர்வினை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.