பொருளாதார நெருக்கடிக்கு நடுவே தொடரும் பண்பாட்டு இனஅழிப்பு!
14 Jun,2022
சிறிலங்கா அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும், தனது பௌத்த மேலாதிக்க சிந்தனையின் வடிவமாக, தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனஅழிப்பினை தொடர்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈழத்தமிழர்களின் பூர்வீக பண்பாட்டு வழிபாட்டு இடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், அத்துமீறி நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலச பூசை தமிழ் மக்களால் நேற்று (12-06-2022) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியில் விவகாரங்களுக்கான அமைச்சு, பாரிய பொருளாதார நெருக்கடிக்கு சிக்குண்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், அதிலிருந்து மீளுவதற்கு பல மாற்றங்களை முன்னெடுத்து வந்தாலும், மாறாத ஓன்றாக தமிழர் தேசத்தின் மீதான அதன் ஆக்கிரமிப்பும், அபகரிப்பும் உள்ளது.
தொல்பொருள் செயலணி, வனஜீவராசிகள் இலக்கா என தனது திணைக்களங்கள் ஊடாக தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனஅழிப்பினை முன்னெடுத்து வரும் சிறிலங்கா அரசாங்கம், இதற்கு துணையாக தனது இனவழிப்பு இராணுவத்தினை கையாளுகின்றது.
மக்கள்திரள் போராட்டங்கள் மூலமே தமிழர் தேசத்தின் மீது தொடரும் இந்த பண்பாட்டு இனவழிப்பினை எதிர்கொள்ள முடியும் என்பதோடு, ஆக்கிரமிப்பு இராணுவத்தினை வெளியேற்றச் சொல்லி மக்கள் போராட்டங்களை கூர்மைப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவாகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.